வெள்ளி, 3 ஜூலை, 2026

ஆகஸ்ட் 31 2020

 

ஏடி வரதராசன்:-

 

பைகட்"டி" சேக்க  பணத்தெல்லாம்; எம்மக்கா

கைகட்"டி" நிக்கிரோமே காலமெல்லாம் --- பொய்கட்"டி"

இந்தட்"டீ" வித்துவித்தே எம்மானோ வச்சிருக்கான்

சிந்திச்சி "டீ"குடிங்க டீ.

 

கவிஞர் மறையேந்தி:-

 

சிந்திச்சே டீகுடிப்போம் சேர்ந்துநாம் டீகுடிப்போம்

வந்திடவா சொல்சொல் மகிழ்ந்து.

 

அகரம் அமுதன்:-

தூக்கலா? கம்மியா? டிக்காஷன்; சக்கரை

சேக்கவா? வேண்டாமா? செப்பு!

 

கவிஞர் மறையேந்தி :-

 

செப்புவேன் சேதிதான் சேக்கலாம் சீராக

எப்போதும் ஏற்பேன் இனிப்பு.

 

அகரம் அமுதன்:-

நாட்டுவெல்லம் நான்இடவா? நன்றாய்ப் பனைவெல்லம்

கூட்டவா? சீனியா? கூறு!

 

கவிஞர் மறையேந்தி:-

 

கூறி மகிழலாம்  கூட்டுவது வெல்லமெனில்

ஊறி உரமூட்டும்  ஓர்ந்து.

 

அகரம் அமுதன்:-

 

ஆட்டுப்பால் சேர்க்கவா? ஆவின்பால் சேர்க்கவா?

நாட்டத்தைச் சொல்வீர் நயந்து!

 

கவிஞர் மறையேந்தி:-

எண்ணி மகிழ்ந்தேன் இனியவிந் நட்பிது

பண்தரும் பாங்கைப் பணிந்து.

 

அகரம் அமுதன்:-

 

விருந்து கொடுப்பதில் வெல்வதார் எம்மை?

இருந்துண்ண வாருங்கள் இன்று!

 

கவிஞர் மறையேந்தி:-

 

நயந்தே நவில்கிறேன் நட்பால் நலத்தை

இயல்பாய் ஈவாய்  இனித்து.

 

அகரம் அமுதன்:-

 

மூத்தோரின் வாழ்த்தே முளைவிடும் எங்களை

காத்துவரும் நல்மருந்து காண்!

 

கவிஞர் மறையேந்தி:-

 

இன்றும் இனியென்றும் ஏற்போம் இசைந்துண்ன

நன்றே நயமுடன்  நான்.

 

காண்போம் களிப்போம் கவிச்சுவையைக் கன்னலாய்

ஆண்டே அனுபவிப்போம் ஆம்.

 

அகரம் அமுதன்:-

 

ஆமென்று நீர்சொன்னால் அன்றென்றா நான்சொல்வேன்?

நாமென்றும் காண்போம்  நலம்!

 

கவிஞர் மறையேந்தி:-

 

நலம்காண்போம் என்னும் நயந்துரையால் என்றும்

வலம்வருவீர் நெஞ்சுள் வளர்ந்து.

 

அகரம் அமுதன்:-

மகிழ்ச்சி அளிக்கிறது; மாகவியுன் நட்பால்

நெகிழ்ச்சி அடைகிறது நெஞ்சு!

 

பாவலர் வையவன்:-

 

வெளுவெளு வென்றே வெளுக்குமும் பாட்டில்

அலுப்பில்லை அத்தனையும் தேன்.

 

அகரம் அமுதன்:-

பண்பட்டோர் வாக்குப் பலிக்கட்டும்; வாழ்த்திது

புண்பட்ட நெஞ்சுக்குப் பொன்!

 

ஆகஸ்ட் 31 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக