வெள்ளி, 3 ஜூலை, 2026

22 ஜூன், 2021

 

அகரம் அமுதன்:-

 

சிக்குப் பிடித்தமுடி சீக்கால் தளர்ந்தநடை

பொக்கைவாய் மூப்பால் பொசிந்தவுரு - சக்கைதான்

தேமாங் கனியில்லை கன்னங்கள் ஆனாலும்

ஆமாம் அவளே அழகு!

 

வரதன்:-

அட பாவி இந்த போட்டோவோட வேல்யூ தெரியாம இப்படி யா எழுதுவாங்க?

 

அகரம் அமுதன்:-

 

கண்டெடுக்கும் முன்புகல் கண்டெடுத்த பின்வைரம்

வண்டுமிழ்ந்த எச்சில் வளமைத்தேன்; - கண்டெடுத்த

ஆளால் பெருமையா? அந்த பொருளாலா?

நீளா விடையைச்சொல் நீ!

 

வரதன்:-

 

வகைவகையாய்ப் பண்ணெழுதி வார்க்கும் கலையாய்ப்

புகைப்படமும் ஒன்றே புரிவாய் -- நகைப்போடோர்

ஆட்சியைப்பா ராட்டல் அகப்படியே; நீயந்தக்

காட்சியைப் பாராட்டு கண்டு.

 

அகரம் அமுதன்:-

 

பாட்டுகள் பாடிப் பரவசத்தால் ஆடிப்பா

ராட்டுகள் கூறும் ரகமிலைநான்; - ஆட்சியர்

சென்னியில் குட்டிச் சிறுமை களைகின்ற

திண்ணிய பாவலன் தேர்!

 

வரதன்:-

 

திண்ணிய பாவலனே! தீட்டியவெண் பாவில்நல்

நுண்ணிய வாசம் நுகர்ந்திட்டேன் --- எண்ணி

சிறுமை உரைக்குங்கால் சீராட்சி தன்னில்

அறுமையும் உள்ளது அறி.

 

அகரம் அமுதன்:-

தேர்வெழுதும் போதே திருத்திமதிப் பெண்வழங்கப்

பார்எனக் கூறல் பகுத்தறிவா!? - ஓர்வருடம்

போகட்டும் பார்க்கலாம்; போரில் கொரோனாவைச்

சாகடித்தால் பார்க்கலாம் சார்ந்து!

 

22 ஜூன், 2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக