வெள்ளி, 3 ஜூலை, 2026

18/8/2020

 

அகரம் அமுதன்:-

 

வெண்பாவாத் தீட்டி வெறுப்பேத்து றான்வரதன்;

பண்பாக நாஞ்சொல்லிப் பாத்துட்டேன்; - ஒண்பா

விருத்தம் இருக்கே விளையாட!? என்ன

வருத்தம் எழுது வதற்கு?

 

ஏடி வரதராசன்:-

 

நளன்கதையை வாசித்த நல்லமுதா; அந்த

விளம்மா"தே மா"ஆமோ வெண்பா? -- உளந்தன்னில்

ஊற்றெடுத்துக் குத்துகின்ற ஊசி; அதுவெண்பா

ஈற்றடியை அன்றி எது?

 

விளம் மா தேமா -- விருத்த சீரமைப்பு.

 

அகரம் அமுதன்:-

 

காவியமே பாடிநம் கம்பன் விருத்தத்தில்

ஓவியமே தீட்டி உலகளித்தான்; - மேவிக்

கலைவலிமை காட்டும் கவிஞர் பலர்க்கும்

தலைவலிதான் வெண்பாத் தளை!

 

ஏடி வரதராசன்:-

 

தலைவலியே அன்றி தனிக்கா வியத்தை

வளைத்தெழுதி விட்டால் வனப்பா? --- தளைதட்டல்

இல்லாமல் வெண்பா இயற்றி அதிலிருக்கும்

கள்ளுண்டுப் பின்சொல் கருத்து!

 

அகரம் அமுதன்:-

 

வெள்ளைப்பா; வெண்பா வெறும்பா; எனப்பலர்

விள்ளக்கேட் டுள்ளேன் விரிவாக; - இல்லையில்லை

வேண்டாம் இதுவென்(று) ஒதுங்கினேன்; நீஎன்னைத்

தூண்டாய் எழுதத் துணைக்கு!

 

ஏடி வரதராசன்:-

 

வெள்ளைப்பா ஆமாம்;  வியன்மணத்தைக் கூட்டுகின்ற

முல்லைப்பா; பெய்யும் முகிலின்பா; -- இல்லைப்பா

என்றியம்ப இங்கே எவருள்ளார்; ஔவையெனுங்

குன்றறிந்துஞ் சொல்லாய் குறை!

 

அகரம் அமுதன்:-

மதுக்கவிதை என்றுநீ மார்தட்டும் வெண்பா

புதுவிருத்தம் போலப் புதுமை - செதுக்கா(து)

அறிவுரைகள் சொல்லி அலுப்பேற்று மன்றிச்

செறிந்தவற்றைச் சொல்கிறதா செப்பு!

 

ஏடி வரதராசன்:-

 

வெண்பாவை என்முன்  வெறுஞ்சொற்க ளோடெல்லாம்

ஒன்றாகப் பேசல் ஒழுக்கமன்று! -- நண்பா!

பலக்கவியை ஆய்ந்தறிந்த நீயாவெண் பாவை

மலக்கவிக்கு நேருரைத்தல் மாண்பு?

 

அகரம் அமுதன்:-

 

கோபப் படவேண்டாம்; கொக்கரித்து என்மீது

சாபம் இடவேண்டாம்; சாந்தம்கொள்; - தூபமிட்டு

நாக்கலப்பைப்* பாவலர்க்குள் நாட்டுகிற வெண்பாவைப்

பூக்குலத்துத் தேனென்றால் பொய்!

 

நாக்கலப்பு - வாய்ச்சண்டை.

 

ஏடி வரதராசன்:-

 

நாக்கலப்பு மட்டும் நடந்ததில்லை; அந்நாளின்

ஆக்கத்தில் வெண்பா அதிகம்தான்; --- ஏக்கங்கள்,

இல்லாமை, ஆன்மீகம், ஏழை மனச்சுமைகள்

அல்லாது அறங்கூறும் அஃது!

 

அகரம் அமுதன்:-

 

பாடு பொருளுக்குப் பஞ்சமில்லா இந்நாளில்

ஈடு கொடுக்கவெண்பா ஏற்றதில்லை; - சாடுவதை

விட்டு முகநூலில் வெண்பாக் களைத்தேடிப்

பட்டுத் திருந்துநீ பார்த்து!

 

ஏடி வரதராசன்:-

 

நானும் கவினென்று நாணமற்று சுற்றுகிறார்

மூணுமிழந் தார்கள் முகநூலில் -- காணும்மண்

பாலைக்குள் நின்றுகொண்டுப் பசுஞ்சுணைநீர் தேடுவது

வேலையற்ற வேலை விடு!

 

அகரம் அமுதன்:-

 

ஆகட்டும் நீசொன்னால் அர்த்தம் இருக்குமது

போகட்டும் ஏன்நமக்குப் பொல்லாப்பு; - சாகசம்

காட்ட விருத்தம் கனக்கச் சிதம்எழுத

காப்பிரைட் கேட்பதார் கண்டு!

 

18/8/2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக