வெள்ளி, 3 ஜூலை, 2026

19 ஜூன், 2021

 

19 ஜூன், 2021 

 

வரதன்:-

ஆண்கூற்று:-

கால்கொலுசை விற்று கடுகுமட்டும் வாங்கிவிட்டோம்;

பால்வாங்க நாளைப் பதக்கமுண்டு; - கால்வயிறு

கஞ்சிக்கொவ் வொன்றாய்க் கழற்று; சிரிப்புமட்டும்

எஞ்சிநின்றால் போதும் இரவு.

 

அகரம் அமுதன்:-

பெண்கூற்று:-

பஞ்சத்தில் பாழும் பசியில் உழல்கையில்

மஞ்சத்தில் சேர மனத்தவிப்போ? - கொஞ்சத்தான்

கூப்பிடும் முன்என்னைக் கொல்லும் பசிதீரச்

சாப்பிட வாங்கியெதும் தா!

 

வரதன்:-

ஆண்கூற்று:-

கதவுகளை மூடிவிட்டுக் காதல்கொள்; பின்னே

எதுவாயின் முன்னின்று எதிர்ப்பேன் -- அதுவரையில்

அப்பசியைத் தீர்க்கட்டும் ஆரம்; உரமூட்ட

எப்பொழுதும் நீதான் எனக்கு.

 

அகரம் அமுதன்:-

பெண்கூற்று:-

தீண்டுவதும் ஆடை திருடுவதும் நூலிடை

நோண்டுவதும் வேண்டாம் நிறுத்திக்கொள்; - வேண்டுவது

காப்பும் கரிசனையும் கண்இமை போலுறவை

மூப்புவரை காட்டும் முனைப்பு!

 

வரதன்:-

ஆண்கூற்று:-

எண்ணம் அறிந்தே இடைவருடும்; என்கைகள்

பொன்முகத்தைப் பார்த்தேபின் பூச்சூடும்; --- கண்நான்கில்

முட்டிக் கிடப்பதெல்லாம் மோகமில்லை; தெய்வீகம்

கொட்டிக் கிடக்குதெனக் கொள்.

 

அகரம் அமுதன்:-

பெண்கூற்று:-

பேசிக் கவிழ்ப்பதில் பேர்போன ஆளாச்சே!

ஏசி விரட்டினும் இங்ககலா(து) - யோசித்தே

இன்னும் ஒருதடவை என்றே இளிப்பவனே!

என்னமோ செய்போ எனை!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக