வியாழன், 9 ஜூலை, 2026

பகடி வெண்பா!

 

பகடி வெண்பா!

 

தனிமரமே! உன்றன் தனிமை அகற்றக்

கனிவனமே வாய்த்த கதைசொல்! – இனிமைமிகு

வண்ணமுகம் கண்டேன்; மயலுற்றேன்; என்போலும்

பெண்ணவளும் பெற்றாள் பிணி! (1)

 

மாவதை செய்யும் மதனம்பில் தப்பிக்கத்

தேவதை உன்றனைத் தேர்ந்தனளோ? – பூவமளிப்

போர்க்குப் பொருந்தும் பொலிவின னென்றேதான்

பார்த்துடன் பட்டாள் பசித்து! (2)

 

எண்ணம் உரைக்க எளிதில் உணர்த்திட

மண்ணில்வாய்ப் பேச்சுக்கு மாற்றுண்டோ? – கண்மொழி

கற்றுத் தெளிந்தால் கதையளக்கும் வாய்ப்பேச்சு

வெற்றுப் பகட்டென்பாய் வெந்து! (3)

 

நின்றுதான் பேசிமிக நெஞ்சம் உணர்த்துதல்

ஒன்றுதான் கண்ணின் உயர்வாமோ? – நன்றுகேள்

ஐம்புலனில் கட்புலனே போய்த்தீண்டி இன்பீயும்

மொய்ம்புடைய தென்பேன் முனைந்து! (4)

 

உரியமொழி பேசி யுணர்த்தற் குரிய

கரியவிழிக் கின்னோர் கவின்சொல்! – உரியவரைத்

தன்னுள்ளே வைத்துத் தனதேக்கம் தீர்க்குமே

அன்னியர் காணாத வாறு! (5)

 

இல்லாள் உடன்நீ இணையப்போம் அவ்விரவில்

நல்லாள் நயனமிடும் கட்டளையென்? – பொல்லா

மதனம்பு பாய்ந்தெனக்கு மையல் வழங்க

மதனுக்கிம் மங்கை விழி! (6)

 

என்றுமில்லாப் பேருவகை இன்றுநீ கொண்டவகை

மென்றுமுழுங் காமல் மிழற்றாயோ? – இன்றுவரைக்

கொல்லரவம் போலென்னைப் பல்லிரவுங் கொன்றதுபோய்

நல்லுறவும் வந்த நயப்பு! (7)

 

நெருநல் வரைநீ நிதமும் அடைந்த

வெருவல் தனித்தா விலகும்? – புருவப்

பெருவில் அணங்கின் மருவில் எனைக்கண்(டு)

உருவில் அனங்கன் உடன்! (8 )

 

பதமெடுத்து நெஞ்சம் படபடக்கப் பாவை

முதலிரவில் உன்முன் முகிழ்ந்தால்? – இதமுடன்

தொட்டமர்த்தித் தோகை துடியிடை மீதொருகை

இட்டமர்த்திக் காண்பேன் இதம்! (9)

 

மென்முறைக்கே ஒக்கல் ஒடியுமெனில் வேட்கையால்

வன்முறைக்கோ நீயங்கு வாய்ப்பளிப்பாய்? – நன்முறையே

அவ்விரண்டும் கட்டில் அமர்க்களத்தில் என்றவளின்

செவ்விதழே செப்பும் சிலிர்த்து! (10)

 

தாள்வீழுங் காரிகையைத் தாங்கிப் பிடித்தவளின்

தோள்வீழ வன்றோ துடிதுடிப்பாய்? – மூள்கின்ற

மோக நெருப்பணைக்க முன்வரும் நேரிழையாள்

தாகத் தவிப்படக்கத் தான்! (11)

 

பொசுக்கென் றணைக்கப் புகுவாயேல் தோகை

விசுக்கென் றகலாளோ விள்ளாய்? – விசும்பா(து)

அகல்வாளை வாரி அணைக்க இசைவாள்

நிகழப்போம் இன்பம் நினைந்து! (12)

 

பூவைக் குரலெடுத்துப் பூவைக் குழல்முடிந்த

பூவை பொறென்றால் பொறுப்பாயோ? – கோவையிதழ்

வாயோடு வாய்வைத்து வாங்க வழங்குவாள்

தீயோடும் நெஞ்சம் தெரிந்து! (13)

 

மச்சம் சிவந்தாளின் மஞ்சல் முகத்தாளின்

கச்சம் களையக் கருதுவதேன்? – அச்சடித்த

உச்சிநிலா தன்னுருவை ஓரிரண்டாய்த் தோற்றியவள்

கச்சையிலா வைகுதெனக் கண்டு! (14)

 

தலையணை ஆங்கே தனிகிடக்க பாவை

முலையணை மீதோஉன் மோகம்? – நிலையணை

ஈதெனக் கண்டேன்; இன்பம் பயக்குமால்

தோதெனக் கொள்வேன் துடித்து! (15)

 

கச்சில் அமைந்த கனிமேல் கருத்தமைத்து

மிச்சில் வடித்தல் மிகையன்றோ? – முச்சில்

புடைத்தரிசி அட்டுதலால் புத்தடிசில் ஆதல்

படைத்துவிடத் தானே பசிக்கு! (16)

 

தட்டில் கனியிருக்கத் தள்ளித் தனிவைத்துக்

கட்டில் கனிமீதே காதலேன்? – மட்டில்

சுவையாவும் மங்கை சுகந்தஉடல் தன்னில்

குவையாகி நிற்றல் குறித்து! (17)

 

மங்கைகொள் தேங்குடமே மையல் தனைப்போக்கும்;

அங்கைகொள் பாற்சொம்பும் ஆங்கெதற்கோ? – கொங்கைகொள்

தேறல் தெவிட்டாதே; தீம்பால் தெவிட்டுமதைக்

கூறல் பொருட்டெனக் கொள்! (18)

 

கட்டிலில் நீயிருக்கக் கன்னி அருகிருக்கக்

தொட்டணைக்க நாணம் துணையாமோ? மொட்டுவிடும்

ஆசைக்குத் தோதாக ஆங்கு வழிவிட்டுப்

பூசைக்கும் தூதாகும் போ! (19)

 

விரகம் ஒருபக்கம் வெட்கமொரு பக்கம்

கரகம் எடுத்தாடக் கண்டால்? – விரகத்தால்

வெட்கம் வகிர்ந்து விடியும் வரையவளின்

உட்குச் செகுப்பேன் உவந்து! (20)

 

கால்நிலா நெற்றிமுக் கால்நிலா கன்ன(ம்)முகம்

பால்நிலா என்றே பகர்வாயோ? – தால்நிலா(து)

அங்கவளின் அங்க அழகை வருணிக்க

இங்குவந்து வாய்த்த தெனக்கு! (21)

 

பாய்ச்சல்காட் டாதுபோய்ப் பண்பாய் மிகுவிரகக்

காய்ச்சல் தணிக்கக் கடவாயோ? – மேய்ச்சலுக்கு

நன்னிலம் கிட்டின் நனிமேயும் பெற்றம்போல்

என்னிலையும் ஆதல் இயல்பு! (22)

 

ஆய கலையனைத்தும் அத்துப் படிதானோ?

ஏயமறக் கற்ற தெவளிடமோ? – நேயனே!

ஆயகலை ஈரெட்டில் ஒன்றுகலை ஒன்றேதான்

ஆயவிலை அஃதுள் அமிழ்ந்து! (23)

 

அல்லாக் கலவியைநீ கற்றவன்போற் கற்பிக்க

நல்லாளை நாடும் நயம்நவில்! – இல்லாள்

துணைகொண்டே கற்றுத் தெளிதல் மரபாம்;

இணைகண்டே இன்புறல் ஏற்பு! (24)

 

கூடல் பொழுதில் கொடியிடை மீதேஉன்

தேடல் எதுவோ? தெரிந்துசொல்! – ஏடல்

எதுவான போதும் இருவர்க்கும் இன்பம்

பொதுவாதல் ஒன்றே புகழ்! (25)

 

இனம்காணா இன்பம் இருமடங் காதல்

மனம்கண்டு மாது மருண்டால்? – தனம்கொண்ட

கோதை அவளுக்குக் கூறுவேன் கொல்லுமதன்

வாதைக் கதுவே மருந்து! (26)

 

இட்டவளை இற்றுவிழ நின்கையால் மெட்டிப்பெற்(று)

இட்டவளைக் கேளென்றால் என்கேட்பாய்? – மொட்டவளைப்

பூமணைமேல் வைத்துப் புதுத்தாலி கட்டிய‍இம்

மாமனைமேல் வாங்கென்பேன் வந்து! (27)

 

மழலை மொழிபேசும் மங்கை அவட்கோர்

மழலை வழங்க மனமோ? – மழலைச்சொல்

கேட்டல் செவிக்கின்பம் தீண்டல் உடற்கின்பம்

வேட்டல் இலார்யார்? விளம்பு! (28)

 

நூலிடை என்றே நுவலரிய நுண்ணிடை

சாலிடை ஆவதிற் சம்மதமோ? – நூலுடை

கொண்டு மறைத்தமு தூட்ட மழலைபெறல்

பெண்ணாய்ப் பிறந்தோர்க்குப் பேறு! (29)

 

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

மதிநூறும் தோற்கும் மனையோ(டு); - அதிகமெனை

வாழ்த்திப் புணர வழியனுப்பும் நீயுமே

வாழ்கமனை யோடு மகிழ்ந்து! (30)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக