புதன், 22 அக்டோபர், 2025

வாழ்த்துப்பா!

 

தூக்கலாய் அல்லாமல்,
தொய்வேதும் இல்லாமல்,
நீக்கமற வள்ளுவத்தில்
நின்றுள்ளான்; - ஆக்கங்கள்
அத்துணையும் தேன்தான்;
அமுத குறள்தெளிய
இத்துணையே போதும்
இனி! 01
முன்னம் எழுதி
முடித்த பனுவலைத்தான்
பின்னும் எளிமை
படுத்தியுள்ளான்; – தென்றமிழர்
உள்ளத்தில் ஏந்தி
உவக்கும் திருக்குறளை
வள்ளுவன் தான்பிறந்து
வந்து! 02
உரைதேடாப் பாட்டை
உலகிற் களித்தான்
நரைகூடா முன்னம்என்
நண்பன்; – கரைகாணாத்
தீங்குறள் ஆழியைச்
சேர்ந்தே கடப்போம்யாம்
ஈங்கிவனே ஓடம் எமக்கு! 03
தோல்,சடை நீக்கிச்
சுளையை வழங்கியுள்ளான்
கால்நடையும் தின்று
களிகொள்ள; – பால்நடை
போடும் கடைப்பாலில்
போட்டான் புதுத்தேனீர்;
ஏடும்பா ராட்டும்
எழுந்து! 04
பொய்யாத் திருக்குறளைப்
புத்தம் பொருட்குறளாய்
நையப் புடைத்து
நமக்களித்தான்; – பையநம்
பாவலன் சங்கர
பாண்டியன் செய்தசெயல்
பூவள்ளிப் பூவணிந்தாற்
போன்று! 05
கடுகைத் துளைத்தேழ்
கடலைஉள் வைத்துக்
கொடுத்தானே வள்ளுவக்
கோமான் – எடுத்திவன்
ஆராய்ந் துவர்ப்பகற்றி
அக்கடுகுள் தூயநன்
நீராழி வைத்தான்
நிமிர்ந்து! 06
வில்லெடுத்தான் ராமன்;
வியந்ததனைப் பாடுதற்குச்
சொல்லெடுத்தான் கம்பன்;
சுகதுக்கம் – எல்லாம்
துறந்தோன் குறளெடுத்தான்;
சுந்தர பாண்டி
குறளுக் கெடுத்தான்
குறள்! 07
பொய்யா மொழிக்குப்
பொருட்குறள் வார்த்தளித்த
அய்யா உனக்கென்
அகவணக்கம் – மெய்யாக
மேனாள் கவிக்கெல்லாம்
மேலான பாவலன்நீ
ஆனானப் பட்டவன்நீ
ஆம்! 08
நொடிப்போழ்த்தில் தீங்குறளில்
நுண்ணறிவி னாலே
இடியாப்பச் சிக்கல்
எடுத்தான் – படிநீ
அறிவும் வளரும்
அகமும் மலரும்
குறிக்கோள் அடைவாய்
குளிர்ந்து! 09
கோடிஉரை கண்ட
குறளுக்குப் பூங்குறளால்
நாடிஉரை நல்கிய
நண்பனே! – கூடியுனை
வாழ்த்தட்டும் ஊருலகம்
வாழ்த்தட்டும் வானவரும்
வாழ்த்தட்டும் வள்ளுவனும்
வந்து! 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக