ஞாயிறு, 5 ஜூலை, 2026

11 ஜூலை, 2021

 

ஊரின் சிறப்பு

________________

அகரம் அமுதன்:-

காரூர நீரில் கயலூர முப்போகம்

ஏரூரப் பச்சை எழிலூரப் - பாரூரில்

நின்றாளும் முத்தமிழ் நேராம் அகம்புறம்

குன்றா வகரஞ்சீ கூர்!

 

ஏடி வரதராசன்:-

காவலுக்கு ஐயனார்; காளை மணிச்சத்தஞ்

சேவலுக்கே கேட்டுச் சிறகடிக்கும்; -- பூவனம்போல்

முத்தானக் கோலத்தில் மொய்க்குமாம் வண்டினங்கள்

அத்தனையும் அத்தியூரில் ஆம்.

 

2

வளம்

_______

அகரம் அமுதன்:-

தலையால் இடறித்தன் தாள்விழ வைக்கும்

மலையொத்துத் தோன்றும் மரங்கள்; - குலைநடுங்கிச்

செல்லும் முகில்கள் சிரம்தாழ்த்திச் சென்றகதை

சொல்லும் எமதூர் சுணை!

 

ஏடி வரதராசன்:-

மன்னன் அரண்மனைபோல் மக்களுக்கும் உண்டாம்;சேய்

விண்மீன் பறித்தே விளையாடும்; -- வெண்புறாக்கள்

மாடத்தில் நின்றே மழைமுகிலை உள்ளிழுத்துக்

காடகலப் பெய்விக்கும் காண்.

 

3

வீரம்

______

அகரம் அமுதன்:-

ஆனைகட்டிப் போரடித்த அந்நாளில் எம்முன்னோர்

ஆனை அடித்துப்போர் ஆக்கினார்; - மானைப்போல்

காட்டு வரிப்புலியை வீட்டில் வளர்த்ததைத்தான்

நாட்டில் கதைப்பர்அந் நாள்!

 

ஏடி வரதராசன்:-

முன்வந்து நிற்க முரண்பிடிக்கும் நாற்படையும்

என்னூர்பேர் கேட்டால் இளைத்தஞ்சும் -- வண்ண

விடியற் கதிர்போல் வியன்மாந்தர் வாழக்

குடிலல்ல எல்லாம் குகை.

 

4

ஊராரின் மனம்

__________________

அகரம் அமுதன்:-

செம்பாதி தந்த சிவனும் எமைக்கண்டே

தம்பாதி தந்தான் தளிர்க்கொடிக்கு; - இம்மையில்

தாரமொன் றென்ற தசரதன் மைந்தனைப்

பாரணிந்த தெங்களின் பண்பு!

 

ஏடி வரதராசன்:-

தண்ணீர்மீன் துள்ளித் தரைமேல் விழப்பார்த்துக்

கண்ணீரே சிந்துங் கவின்மனத்தார் -- என்னூரில்

மாட்டுக்கும் பேர்வைத்து மார்பணைப்பர்; அஃறிணையைக்

கேட்டாலே சொல்லுமையா கேள்.

 

5

பெண்களின் அழகு

______________________

அகரம் அமுதன்:-

கூந்தல் உதிர்த்தபூ கோடிபெறும்; பொன்மஞ்சள்

சாந்தரைத்த கல்விலைவிண் தாண்டிவிடும்; - சார்ந்துவிலை

காண்பாரும் இன்னவிலை என்றறியார் எம்பெண்டிர்

தூண்தொடை தொட்ட துணிக்கு!

 

ஏடி வரதராசன்:-

தேக்கன்னப் பேரெழிலின் தேர்கூந்தல் சேரு(ம்)வரை

ஈக்கள் அமராது இனங்காக்கும் – பூக்கள்

அலைத்தென்றல் வீச இலையொளிந்து நிற்கும்

குலையா திதழ்காத்துக் கொண்டு.

 

அகரம் அமுதன்:-

இம்மா நிலத்தாரும் இன்கண் இமைக்காத

அம்மா நிலத்தாரும் ஆர்த்துரைப்பர்; - சும்மாஎம்

சுந்தரிகள் கொப்பளித்துத் துப்பியநீர் தீர்த்தமென்று

வந்தருந்திச் சென்றவர லாறு!

 

ஏடி வரதராசன்:-

செம்பொன் நிறப்பெண்கள் சென்றுவிட்டால் ஆலயத்துள்

கும்பலுடன் ஐயர் குழம்பியந்த --- அம்பாள்

சிலையோ எனவெண்ணிச் சிந்தைமாறிப் பெண்முன்

மலைத்தோதி நிற்பார் மறை.

 

6

ஈகை

______

அகரம் அமுதன்:-

மயிலுக்குத் தோகை வழங்கியஎம் பெண்கள்

குயிலுக்கும் கீதம் கொடுத்தார்! - பயின்றநல்

வீரத்தைத் தந்ததெல்லாம் வேந்தர்க்கே எம்ஆண்கள்

ஈரத்தை நீருக்கே ஈந்து!

 

ஏடி வரதராசன்

காணென் கரமென்றால் கண்டு குறிசொல்லார்

ஆணென்றும் பெண்ணென்றும் அத்தியூரார்க்(கு) -- ஏனென்றால்

ஈகையெனும் ஒன்றால் இருகரமும் ஈந்தீந்து

ரேகை அழிந்திருக்கும் இங்கு.

 

7

காதலின் தூய்மை

____________________

அகரம் அமுதன்:-

கட்டிவந்த சேலை கசங்காமல் வீடடைய

எட்டிநின்று காதல் எழில்வளர்ப்போம்; - தொட்டாடக்

கண்ணுக்கும் எல்லையுண்டு; கண்ணொடுகண் பேசுவதெம்

மண்ணுக்கே உண்டான மாண்பு!

 

ஏடி வரதராசன்:-

நம்பி அமரும் நறுமலர்கள்; பெண்றலையில்

தும்பி மதுவைத் துணிந்தெடுக்கும்; --- எம்மூரில்

தேகம் இணையாத தேன்சுத்தக் காதலுக்கு

மேகமில்லா வானுவமை மேல்.

 

அகரம் அமுதன்:-

இன்றளவும் வெண்ணிலா இன்னுடல் தேய்வதும்

பொன்னுடல் மேற்கறை பூப்பதும் - அன்றொருத்தி

முன்னின்று காதல் மொழிவதற்குத் தூதாகத்

தன்னை அனுப்பாத தால்!

 

ஏடி வரதராசன்:-

வேல்போல் விழியென்றும் வில்போல் புருவமென்றும்

பால்போல் தமிழிற்பண் பாடியதேன் -- கேள்கேள்கேள்

எட்டிநின்றே காதலம்பை எய்து வதைத்தமையால்

கட்டிவைத்தான் அன்றே கவி.

 

8

அறுசுவை

____________

அகரம் அமுதன்:-

அம்மி மணக்க அடுத்த தெருமணக்கக்

கும்மி அரைத்த குழைசாந்தை - எம்பெண்கள்

இட்டுச் சமைத்த இளவாட்டுக் கால்சூப்புக்(கு)

எட்டூர் கிடக்கும் இளைத்து!

 

ஏடி வரதராசன்:-

எஞ்சியதை ஆக்குகின்ற ஏழை எனும்போதும்

அஞ்சறைக்குள் கையால் அளந்தெடுத்து --- வஞ்சியிவள்

ஆக்கிப் பரிமாற ஆங்குலவும் வாசனைக்கே

நாக்கூற நிற்பான் நளன்.

 

9

சேய்மை

__________

அகரம் அமுதன்:-

விண்ணிடம் ஓர்நாள் விடுப்புமடல் தந்துவிட்டு

மண்ணிறங்கி எங்கள் மனைக்குவந்(து); - உண்ண

நிலாச்சோறு கேட்டு நிலவுவந்து நிற்கச்

சிலாகித்(து) அளிப்பர் சிறார்!

 

ஏடி வரதராசன்:-

ஆழ்குளத்தில் நீச்சல் அடிக்குங்கால் பிள்ளைகளும்

காழ்ப்பின்றி மீன்குஞ்சு கற்குமதை; -- மூழ்கிவிட்டால்

கொக்குகளே தோற்றார் குறிப்பெழுதும்; தாம்பாகும்

அக்குளத்துத் தாமரைத்தண் டாம்.

 

10

கலவி

_______

அகரம் அமுதன்:-

ஓய்வளிப்போம் நான்முகனுக் கோய்வளிப்போம் மாதவனுக்

கோய்வளிப்போம் ஆதிசிவ ஓட்டனுக்கும்; - ஓய்வளியோம்

மாதம் முழுதும் மலர்க்கணை ஏந்துமதன்

தூதனுப்பும் காதல் தொழிற்கு!

 

ஏடி வரதராசன்

அன்றிற்புள் எல்லைக்குள் ஆங்காங்கே காவலாகி

விண்கதிரோன் வந்தால் விரட்டிவிடும்; -- தண்மதிக்குத்

தேன்கலக்கும் வேலைசெய்யும் தேனீக்கள்; கட்டிலுக்கும்

நாண்பூட்டப் போமோ நகரந்து.

 

11 ஜூலை, 2021 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக