நறுக்குத் தெறித்தாற்போல்
நற்கவிதை செய்து
செய்தீர்; - வறுத்தெடுத்த
வேர்க்கடலை போலே
விரும்பிப் புசிப்பதற்குச்
சீர்தொடுத்த தன்மை
சிறப்பு! 01
வாய்விட்டுப் பாடும்
வகையில் வரியாவும்
பாய்போட்டு நாவில்
படுத்திருக்க - ஆய்ந்தெடுத்த
சொல்லால் மனதில்
சுகப்போதை ஊட்டியுளீர்
கல்லல்ல உம்பாட்டு
கள்! 02
பூவா? புதுத்தேனா?
பொன்னா? பொழில்மீனா?
தீவா? திசைதானா?
செவ்வானா? – நாவா?அந்
நாவைகும் தாலாட்டா?
நற்றமிழின் கையூட்டா?
பாவையே! யாதுனது
பாட்டு? 03
சந்தனத்தில் வார்த்தையையும்
சவ்வாதில் சொற்களையும்
கந்தமுறத் தோய்த்துக்
கவிநெய்தீர் – அந்திவரை
தாங்காத மோகத்
தணல்குளிக்கும் மங்கையைப்போல்
தூங்காது நூல்குடித்தேன்
தோற்று! 04
முப்பதுநூல் போட்டு
முடித்த புலவனும்
இப்பதுமை நூலுக்
கிவண்தோற்பான் – அப்படியோர்
ஆன்ற புலமை
அமைந்திடப் பெற்றுள்ளார்
சான்றோர்வாய் வாழ்த்தட்டும்
சார்ந்து! 05
அற்பனுக்கு வாழ்க்கா
அரிதான நல்லபலக்
கற்பனைகள் வாய்த்தஇளம்
காரிகையே! – விற்பனைக்குக்
காணிகள் கிட்டும்;
கவிதைகள் கிட்டுமா?
ஆணிப்போன் தானா
அவை? 06
பாவெனும் அந்தப்
பழுதடைந்த வீட்டைப்பெண்
பூவெனும் மங்கை
புதுக்கினார் – ஆவின்பால்
காய்ச்சினார் நெய்விளக்கின்
கண்சுடர் ஏற்றினார்
பாய்ச்சினார் ஆனந்தம்
பார்! 07
வெண்பாவை நல்ல
விருத்தத்தை ஐக்கூவைப்
பெண்பாவை தீட்டிப்
பெயர்பெற்றார்; - கண்பாவை
போலும் அழகழகாய்ப்
பூத்த கருத்தெல்லாம்
பாலும் பழரசமும்
பார்! 08
இதுகவிதை என்றே
இயம்பும் படியாய்ப்
புதுக்கவிதை நன்றே
புனைந்தார் - எதுகவிதை
என்பவர் கண்டால்
இதயம் இழந்திடுவார்
பொன்பெறும் அன்றோ
புனைவு! 09
தொட்டபொருள் எல்லாம்
துலங்கும் படிஎழுதும்
கெட்டிக்கா ரப்பெண்
கிடைத்துள்ளார்; – பட்டிதொட்டி
பாராட்டை நல்கினால்
பற்பல நூல்படைப்பார்;
சீராட்டை ஆழ்மனமே
சிந்து! 10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக