1/9/2020
ஏடி வரதராசன்:-
பாய விரிச்சாச்சி பைய படுத்தாச்சி
வாயழாம கண்ணீர் வடிச்சபடி ---
மேயநான்
காலையில எங்கபோக காசுபணந்
தேடியின்னு
மூலையில குந்திகிட்டேன் முன்.
அகரம் அமுதன்:-
முதுக வளச்சி முனைப்பா ஒழச்சா
எதுவும் கெடக்கும் எளிதா; - பொதுவாக
ஓர்கதவு மூடினாமற் றொன்று
தெறக்கும்பார்;
சோர்வெதற்கு? நன்றாகத் தூங்கு!
ஏடி வரதராசன்:-
வளஞ்ச முதுவின்னும் வானம்பாக் கல்ல
களச்சே நகருது காலம் - களத்துல
கால்வச்சா எல்லாங் கணக்கா சருக்குதே
நாள்பூரா நாசந்தா னா?
அகரம் அமுதன்:-
துணிஞ்ச வனுக்கில்ல துக்கம்; அறிவ
அணிஞ்ச வனுக்கில்ல அழிவு; - கணிச்சிநாஞ்
சொல்லுறன் சோகத்தத் தூக்கியெறி; நீகூட
வெல்லுற காலம் வரும்!
கலங்காதே கண்கள் கடந்துவிடும்
இஃதும்;
மலங்காதே நெஞ்சம் மகனே! - விலகாம
காளை வயதிதில் கஷ்டம்
தொடர்ந்தாலும்
நாளை நமதென்றே நம்பு!
ஏடி வரதராசன்:-
பாடுபட்டுப் பாடுபட்டு பஞ்சந்தான்
நாங்கண்டேன்
ஊடுபூரா கந்துவட்டி சீட்டுதான் ---
கோடுபோட்டு
காசோட வாழ கனவு; கடங்கேட்டா
பூசி மொழுகணும் பொய்.
அகரம் அமுதன்:-
"வேர்வைக்கும் வெற்றி,எந்த வேர்வைக்கும்; நாளைக்கே
ஊர்வைக்கும் உன்னைத்தன் உள்ளத்தில்" -
வார்த்தையிது
வாலி உரைத்தது வாட்டம் விடுத்துநீ
சோலியைப் பாராய் தொடர்ந்து!
கதுப்பில்கை வைத்துக் கலங்கிக் கிடந்தால்
ஒதுங்குமா ஏழ்மை? உரைப்பேன் -
இதுகேள்!
முயல்ஆமை போட்டிமுயல்தோற்று நிற்க
முயலாமை காரணம் முன்பு!
1/9/2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக