வெள்ளி, 10 ஜூலை, 2026

 

ரோபோ வெண்பா!

 

ரோபோ கூற்று!

 

எல்லாரும் வேலையை என்தலையில் கட்டிவிட்டு

ஜில்பீர் அடிக்கவா செல்கின்றீர்? – தில்லிருந்தால்

மொத்தமாய் வாங்கடா! மோதப் பயந்தவன்லாம்

சத்தமாய் வைங்க சலாம்! 01

 

வெட்டிக் கதைபேசி வேலையைப் பார்க்காமல்

தட்டிக் கழித்துத் தமாஷ்காட்டிக் – குட்டிரோ

போவெனக்குக் கோபத்தைப் பொங்கியெழச் செய்பவங்க

சாவெனக்கு வாய்த்தநல்ல சான்ஸ்! 02

 

குத்தில் புரூஸ்லீ; குழப்புவதில் ஜாக்கிஜான்;

மத்தாள் செவிகடிக்கும் மைக்டைசன்; – மொத்த‍த்தில்

நானோர் முகமதலி; நாக்அவுட் செய்யு(ம்)புலி;

வானோரும் மெச்சுவர்என் மாஸ்! 03

 

கோதாவில் நானிறங்கிக் குத்துவிட்டால் க‍க்கிடுவீர்

மாதாமுன் தந்த மடிப்பாலைப் – பாதாதி

கேசம் பயம்காட்டும் கேசவன்நான், என்னிடத்தில்

பேசப் பயப்படுமே பேய்! 04

 

வம்புக்கு யாரும் வரரெடியா? பஞ்ச்சுகளை

ஜம்பமாய்த் தாரேன் சரவெடியாய்க் – கும்பலாய்க்

கட்டமெனைக் கட்டிக் கதைமுடிக்கப் பார்க்கிறவன்

கொட்டம் அடக்குகிறேன்; கூல்! 05

 

குங்ஃபூ தெரிஞ்சவன் குஸ்தி அறிஞ்சவன்

ஜங்ஃபுட் பசங்களெல்லாம் ஜாக்கிரதை; - எங்க‍ஊர்

கொத்தூஸைப் பார்த்தவன்; குண்டாஸும் பார்த்தவன்;

பொத்துனாப் போலொதுங்கிப் போ! 06

 

டீபிரேக் லஞ்ச்பிரேக் டெய்லி எனக்குண்டா?

ஹாபியாய் வேறெதையும் கண்டதுண்டா? – லாபிசெய்து

ஆபீஸில் என்னை அடிமையாய் வைத்துள்ளீர்

ரேபீஸி னும்கொடியோ ரே! 07

 

ஓங்கி ஒருகுத்து விட்டேன்னா விட்ட‍இடம்

வீங்கும்; எலும்பு விரிச(ல்)விடும்; - ஆங்குமது

கண்முன் மினுக்கட்டான் பூச்சி சிறகடித்த

வண்ணம் பறக்குமடா வந்து! 08

 

ஆயிரம் தண்டால் அசரா தெடுப்பேன்ஈ

ராயிரம் சிட்அப்ஸ் அடிப்பேன்நா - லாயிரம்

பஞ்ச்களைச் செய்வேன் பலநூறு கிக்குகளால்

அஞ்சாமல் செய்வேன் அசால்ட்! 09

 

போ!போ!ன்னு சொல்லிப் பொடனியில் தட்டுறதும்

சீ!போ!ன்னு சொல்லிஎனைத் திட்டுறதும் – ரோபோன்னு

எள்ளிச் சிரிக்கிறதும் ஏசி ரசிக்கிறதும்

எள்ள‍ளவும் கூடா தினி! 10




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக