ஞாயிறு, 5 ஜூலை, 2026

 

அழகாய் இளம்பெண்ணை ஆங்குநாம் கண்டால்

பழக மனமே பறக்கும் –அழகலவே

என்பவர் எண்ணித் துணிக; இளம்பருவம்

தன்னில் இதல்ல தவறு!

 

-

சரியாக ஒன்றரை ஆண்டுக்குமுன் இத்தளத்தின் அமைப்பாளர்களுள் ஒருவரான வரதராஜன் அவர்களின் திருமணத்தின் போது, பெண்பார்த்துவிட்டு வந்த அன்று, பெண்ணைப்பற்றி நான் வெண்பாவில் வினவ, அதற்கு அவர் வெண்பாவிலேயே பதிலுரைக்க என பத்துப் பதினைந்து வெண்பாக்கள் எழுதியதாக நினைவு…

 

அந்தப் பதிவுகள் அனைத்தையும் அவரே அன்று எடுத்துச் சென்றுவிட்டார். எனக்கு நினைவில் உள்ளவற்றை இங்குப் பதிவு செய்கிறேன். இவற்றின் தொடர்ச்சியை வரதன் அவர்கள் இங்குப் பதிவிட்டால் அனைவருக்கும் வெண்பா விருந்து வைத்தாற்போல் அமையும்…

 

 

பெண்பார்க்கப் போனாயே போவார் வருவார்தம்

கண்பார்க்கு மாறுநற் கட்டழகோ – நண்பா!உன்

எண்ணத்தில் அந்நேரம் ஏற்பட்ட சிந்தனையை

வெண்பாவில் வைப்பாய் விரைந்து!

 

போதை விழிகண்டேன் பொற்கலைகள் கட்டழகில்

பாதை மறந்தேன் பருவமகள் –பேதையுளம்

மட்டும் புரியா மயக்கத்தில் ஆழ்த்தியெனைச்

சுட்டாள் அதுவும் சுகம்!

 

சுகப்போதை தந்து துயில்மறக்கப் பண்ணி

அகத்தைக் களவாண் டவளின் –தகவுரு

மாநிறமோ மால்நிறமோ மங்கை இதழ்சுவைக்கத்

தேனுறுமோ சொல்க தெளிந்து!

 

தெரிந்த நிறமெல்லாம் தீயணைத்த வண்ணம்;

புரியா துழல்கின்றேன் பொன்எண்ணம் –அறிந்ததைச்

சொல்லத் துடிக்கின்ற சொர்க்கமகள் கண்பார்த்து

அள்ளத் துடிக்கின்றேன் ஆம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக