வியாழன், 9 ஜூலை, 2026

பகடிவெண்பா

 

பகடிவெண்பா

 

தீட்டிய பாவில்தான் தீஞ்சுவையோ? இல்லைமை

கூட்டிய பார்வையில்தான் கொங்குளதோ? – கேட்டவுடன்

நேற்றுவரை பாவென்றாய்; நேரெதிராய் நாளைமை

ஊற்றிய பார்வையென்பாய் ஓர்ந்து! 01

 

சித்திரம் சின்னச் சிலையொத்த மேனியினாள்

பத்திரம் அப்பா!நீ பார்த்துக்கொள்; – அத்திரங்கள்

போட‍ட்டும் காமன்; புதுமண மக்காள்நங்(கு)

ஆட‍ட்டும் கட்டில் அசைந்து! 02

 

இடம்மாறும் பெண்ணால் இடம்மாறும், நெஞ்சம்

இடம்மாறும் பெண்ணின் இயைவால்... – இடம்மாறும்

யாவும் அணைப்பால்யார் ஆண்பெண்ணென்(று) யார்சொல்வார்?

ஓவும்பூங் காற்றும் உணர்ந்து! 03

 

சந்தியா காலத்திற் சந்தித்து நீரிருவர்

சந்தியாக் காலத்தைச் சாடுவிரோ? – சிந்தைநீ

செய்கும் தமிழ்மொழி தேமொழிக்கீ டில்லையென்று

வைகுமோ நண்பா!உன் வாய்!? 04

 

நானென்று சொல்கின்ற நாளோடிப் போனதினி

நானன்று நாமென்று நாமொழியும்; – தேனின்றுன்

உள்ளங்கை தன்னில் உணத்தான் தடைபோடும்

உள்ளபடி நாணம் உயர்ந்து! 05

 

நங்கை தலைசாயும் நாணத்தால் அப்பவும்என்

பங்கைத்தா என்றே பகர்வாயோ? – நுங்குநிகர்

நாவால் அவள்பேர் நவின்றரு கேஅழைத்துத்

தேவாய் சுவைக்கையில் தேர்ந்து! 06

 

உண்ணா வறளும் உடலம் உதறலுறும்

உண்ணாய் பசித்தும் ஒருவாய் – எண்ணாய்

எதையும் அணங்கின் எழில்கண்(டு) உளறும்

அதையும் இதையும்வாய் ஆம்! 07

 

பாயே இலையாக பாவை உணவாக

நீயோ பசியில் நெலிவாயே! – நீயாக

அள்ளித்தான் உண்ணவும் ஆகாதே! நாணத்தால்

உள்ளம்தான் நோகும் உடைந்து! 08

 

பசிக்கும் பசும்பால் பழமிருக்க‍க் கண்டும்

புசிக்கும் நினைவற்றுப் போகும் – புசிக்கின்

புளிக்கும் உளம‍ந்தப் பூவை இடம்மேவிக்

களிக்கும் தடைகள் கடந்து! 09

 

சேவல் எழுப்பச் செழுங்கதிரோன் வான்மேவப்

போவதேன் அல்இப் பொழுதென்றே – ஆவல்

தணியா மனத்தாய்! தவிதவிப்பாய் மற்ற

பணியாவும் போகும் மறந்து! 10

 

மாசறு பொன்னே வலம்புரிசங் கேஎன்று

பேசரு பேச்செல்லாம் பேசியே – நேசமுடன்

மாதிரை ஆகின்ற மஞ்சப் பொழுதுகளை

ஆதிரைச் சித்தா!நீ ஆள்! 11

 

உடலே விரகா உளமே உலையா

அட‍டா! விழியே அணலா – நடக்கும்

சமையல் முடிவில் சனிக்கும் மழலை

உமையே உருவாய் உரித்து! 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக