வீரியம்
விதைப்போம் எழுத்தின் வழியே!
பல்லெல்லாம் தெரியக் காட்டிப்
பகட்டுக்குப்
படத்தை ஓட்டிச்
சொல்லெல்லாம் சோரும் வண்ணம்
சொல்வதா
கவிதை? உள்ளே
ஜில்லிட்ட நரம்பு நாடி
ஜிவ்வென்று
புடைத்து ரத்தம்
வில்லிட்ட அம்பாய்ப் பாய
விளைப்பதே
கவிதை யாகும்!
மானென்றும் மலைத்தே னென்றும்
மங்கையைப் பாடல் விட்டு
ஊனென்றும் உயிரே என்றும்
உயர்காதல் நாடல் விட்டுக்
கூனென்றும் குறையே என்றும்
கொள்கைகள் சாடல் விட்டுத்
தானென்னும் தருக்கும் விட்டுச்
சமுதாயம் பாடல் வேண்டும்!
ஊருக்குப் பயன்ப டாத
ஒருவரி கவிதை கூட
பேருக்கே வாழு மன்றிப்
பெரும்பயன் விளைப்ப தில்லை;
நீருக்குச் சிறப்பு தாகம்
நீக்குதல் போலப் பாக்கள்
யாருக்கோ பயனை நல்க
யாப்பதே பெருமை யாகும்!
அடுத்தவன் கண்ணீ ருக்காய்
அழுதிடும் கவிதை தன்னைக்
கொடுத்தவன் தம்மைக் காலம்
குறித்துமே வைத்துக் கொள்ளும்;
கெடுப்பவன் கெடுத்த போதும்
கீழ்நிலை உற்றி டாமல்
தடுப்பவன் நாணும் வண்ணம்
தரணியே உச்சி மோரும்!
வாசிப்போன் தன்னைக் காணும்
வகையிலே கவிதை செய்தால்
நேசிப்பான்; எழுதி யோனை
நித்தமும்
நெஞ்சில் வைத்துப்
பூசிப்பான்; அஃதை விட்டுப்
பொழுதுபோக் கெழுத்தைத் தந்தால்
யோசிப்பான்; வெறுத்தொ துக்கி
யோசனை தூரம் செல்வான்!
இருக்கிற ஆற்றல் மொத்தம்
எழுத்திலே காட்டு கின்ற
பொறுப்புடன் எழுதி வந்தால்
புகழ்தங்கும்; ஏதோ ஒன்றைக்
கிறுக்கியே வைப்ப தாலும்
கேட்பவர் நைப்ப தாலும்
உறுபயன் ஒன்று மில்லை;
உருப்படும் கவிதை செய்வீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக