ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

10 ஆகஸ்ட் 2022

 

கள்கொட்டி நெய்த கவிதைகளை நானுனது

உள்பெட்டி சேர்க்கும் உளமில்லை; - நள்ளிரவு

வாதைகள் தீர்க்க வரவுமில்லை; சூதுடைய

கோதை உனதுறவு கோது!

 

கொஞ்ச வயசுமில்லை; கொஞ்சும் பவிஷுமில்லை;

கொஞ்சம் கொழுப்பெனில் குற்றமில்லை; - அஞ்சுகமே!

மெத்தைக்கு நீபழசு; வித்தைக்கு நீமவுசு;

சொத்தைக்கா நான்தருவேன் சொத்து!?

 

வயசப் படியுனக்கு வட்டமிடு கின்றாய்;

கயல்குதிக்கி றாய்பசுங் கன்றாய்; - முயல்குதித்து

ஆடை சரிகிறாய்; ஆளை அரிகிறாய்;

ஜாடையில் நீயும் சனி!

 

சிங்கப்பூர் இல்லைநீ; சீரான தொல்லைநீ;

ரங்கோலி இல்லைநீ; ராட்சஸிநீ; - வெங்காயத்

தோல்நீஉள் ளீடில்லாய்; சொல்லஓர் பீடில்லாய்;

பால்நான் படுத்தாய் பழுது!

 

ஜிம்பாடி ஏதெனக்கு? செந்தமிழே தோதெனக்கு;

லம்பாடி பெண்ணே! லடாய்எதற்கு? - எம்பாடு

நாளைக் கடப்பதற்கு; நானாய் இருப்பதற்கு;

ஆளை விடுநீ யடி!

 

தோள்மாறி இங்குவந்த தோகையே! கைகலக்க

ஆள்மாறி இங்குவந்த ஆரணங்கே! - நாள்மாறும்

நான்மாற மாட்டேன்; நடைமீற மாட்டேன்;உன்

ஊன்பொதியை நீதூக்கி ஓடு!

 

இருந்துண்ணும் எண்ணம் எனக்கில்லை கட்டில்

விருந்துண்ண நீயழைக்க வேண்டாம்; - மருந்தெனினும்

உண்ணும் விருப்பமில்லை; உன்மேல் வெறுப்புமில்லை;

கண்வளர்த்த காமம் கலை!

 

கல்மிஷம் இல்லாக் கவிஞன்நான்; என்னிடம்

சில்மிஷம் செய்யும் சிறுகரும்பே! - பல்விஷம்

என்செய்யும் என்றா எடுத்தரவைக் கொஞ்சுவது?

உன்புன் னகைசெய்யும் ஊறு!

 

கிள்ளத்தான் தோணும்; கிளுகிளுப்புக் காணும்;உடன்

அள்ளத்தான் தோணும்; அதற்காகத் - துள்ளியெழுந்(து)

அள்ளுவதும் கிள்ளுவதும் ஆகாதே நாகரீகம்;

தள்ளிநின்று கொள்நீ தவிப்பு!

 

கற்போடு நானுள்ளேன்; கால்கட்டும் போட்டுள்ளேன்;

கொற்கைமுத் தன்ன'ஒய்ஃப்' கொண்டுள்ளேன்; - மற்றொரு

மாதுதொட மாட்டேன் மனதாலும்; காரிகையே!

தூதுவிட வேண்டாம்போய்த் தூங்கு!

 

'ஷார்ப்பு'நகை, பெண்ணாய்ச் சமைந்தமுகை கொண்டேன்;ஓர்

சூர்ப்பனகை தேடேன் சுகத்திற்கு; - கூர்விழியே!

காத்திருந்து ஏமாற கால்கடுத்து நீசோர

பூத்திருந்து நீபொசுங்காய் போ!

 

கட்டில் எனக்கிருக்கக் கட்டாந் தரையெதற்கு?

தொட்டிலுள்ள போதெதற்குத் தூர்ந்தகுழி? - கட்டிப்பொன்

கைமேல் இருக்கக் களிமண்ணை ஒத்த உன்

மெய்மேலா மோகங்கொள் வேன்!?

 

கண்ணுளியைக் கொண்டு கருத்தை ஒருங்கமைத்து

மண்ணுளியை யார்தான் வடித்தெடுப்பார்; - பெண்ணலநீ

பேசும் சிலையென்று பேத்தும் கவிதையெனில்

ஏசும் தமிழே எதிர்த்து!

 

படிதாண்டி நீவரலாம்; பாவலன்நான் வெண்பா

அடிதாண்ட மாட்டேன் அறிவாய்; - அடிபோடி!

வீட்டில் ருசிக்க விருந்திருக்கப் போவேனோ

ரோட்டுக் கடை'டிஷ்'க்கு ரோந்து!?

 

ரம்பைநூல் விட்டாள் ரகசியமாய்; ஊர்காண

அம்பைநூல் விட்டாள் அவசரமாய்; - 'தொம்'மென்று

வீழாத நான்,நீ விரிக்கும் வலையிலா

பாழாவேன் உள்ளம் பசித்து!?

 

மேய்ச்சல் நிலம்தேடி மேய்வது உன்இஷ்டம்;

காய்ச்சல் நிலம்நான் கடந்துபோ; - ஏய்பெண்ணே!

காற்சட்டைப் பையிரண்டும் காலி; இலைபாராய்!

மேற்சட்டைப் பையிலொன்று மே!

 

ஃபேஸ்புக்கில் மேய்வதுன் ஃபேஷன்; உனக்கந்த

ரேஸில் கிடைக்கலாம் ரேஷன்;என்ன - டேஷுக்(கு)

எனைவளைக்கத் தேடுகிறாய்? எத்தனையோ பேருண்(டு)

உனையணைக்கப் போயங்(கு) உலவு!

 

'தொழில்'செய்ய ஃபேஸ்புக் தொழில்நுட்பம் ஏற்ற

வழியெனநீச் சுற்றி வரலாம்; - விழிகளால்

காதல் வலைவீச காமக் கதைபேச

ஏதடி நேரம் எனக்கு?

 

நாற்பதைத் தொட்டவன்நான்; நப்பாசை விட்டவன்நான்;

நாற்றிசையில் நற்பேரை நட்டவன்நான்; - தோற்பை

வியப்பையெலாம் விட்டேன் வெகுநாள்முன்; சின்ன

வயசிருக்கும் ஆளை வளை!

 

சைக்கிளே போதும் சவாரிநான் போக; ரேஸ்

பைக்கெலாம் வேண்டாம் பறக்க;இரு - கைக்கொள்ளாப்

பிஞ்சுமாங் காய்களை பிய்த்துச் சுவைப்பதற்குப்

பஞ்சமா நாட்டில் பயல்!?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக