திங்கள், 3 ஆகஸ்ட், 2026

 

கல்லாமை வேண்டும் கரவு பிறன்மனையைப்

புல்லாமை வேண்டும் புரி!

 

இல்லாள் அகத்திருக்க இன்னொருத்தி யைத்தேடல்

நல்லார்க்(கு) அழகோ நவில்!

 

அகத்தாள் இருக்க அயலவளைக் கூடல்

முகையிருப்ப முள்நுகர்ந் தற்று!

 

தேனிருப்பத் தேனடையைச் சென்றுண்ப தொக்குமில்லாள்

தானிருப்ப வேற்றவள்சார் தல்!

 

உனக்கென்(று) ஒருத்தி உளக்கால் உளத்தால்

நினையாய் அயலவளை நீ!

 

கூட ஒருத்தியைக் கொண்டபின் மற்றவளை

கூட நினைத்தல் கொடிது!

 

உற்றவளை நாடி உறவுகொள்; ஒர்பொழுதும்

மற்றவளை நாடல் மறு!

 

ஒருத்தியோ(டு) உற்ற உயர்வாழ்வே வாழ்வாம்

கருத்தினில் ஏற்றல் கடன்!

 

நினைவோடும் மற்றொரு நேரிழையை எண்ணாய்!

மனையாளோ(டு) இன்புறுதல் மாண்பு!

 

ஒருவர்க்(கு) ஒருத்தியென்ற ஒப்பில் மொழியைக்

கருத்தில் நிறுத்திநெறி காண்!

 

இருமனையாள் தேடி இணைவதுவும் வேண்டா;

ஒருமனையாள் போதும் உணர்!

 

வரைவின் மகள்சேர்ந்து வாழீர்; பிரிதில்

உயிர்க்கொல்லி நோயின் உரை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக