சனி, 30 ஆகஸ்ட், 2025

மழையோடு கிழவியின் மல்லிகைப் பேச்சு!

 

வாங்கிஎங் கூர
வழங்குதே உள்ள…ஒரு
வீங்கிய பாத்தரமும்
வீட்டிலில்ல... - ஓங்கி
ஒசக்க உறுமி
ஒழுவும் மழயே!
கசக்கிட வேணாமே
கண்! 1
மோட்டுவள ஓட்டவழி
நோட்டமிடச் சூரியனார்
நீட்டுமொளி சொல்லியா
நீவந்தே? - காட்டிருட்டில்
கண்தெரியாப் போதும்
கனகச் சிதமாக
முண்டுறியே வந்தெனக்கு
முன்!? 2
எத்தன ஓட்ட
இருக்குது கூரையில
அத்தனயும் எண்ணி
அலுக்காம - சத்தமாச்
சொல்லிட்டுத் தாம்போவ…
சொல்லா மலாபோவ..?
தொல்லயாப் போச்சுன்
தொணப்பு! 3
குறுகுறுக்குதே பார்!
குடிச... நானாஉன்
கிறுகிறுப்பக் காட்டக்
கெடச்சேன்? - சுறுசுறுப்பாச்
சுத்தி அடிக்கிறியே!
சொல்லியாவப் போவதென்ன
புத்தி ஒனக்கில்லாப்
போது? 4
வாசலோடப் போவும்
வருஞ்சனம்; நீமட்டும்
ஆசயோட உள்ள
அமரவர... – பேசத்
தொணயாக் கெழவிக்கு
தோதாக வாச்ச...
தெனமுமிது போலவந்து
செல்! 5
ஊசியில நூலெடுத்து
உச்சிவான நாந்தைக்கப்
பேசியொரு சந்தர்ப்பம்
பெற்றுத்தா... – மாசிமழ
மண்ணுக்கு வந்தாஎன்
மண்குடிச மண்ணாவும்;
கண்ணுல்ல...! நீகருண
காட்டு! 6
பசியில நானே
பரிதவிச்சிப் போறேன்
நிசியில நீவந்து
நின்னா... – மசிச்சிக்
கொடுக்கஒரு கூழிருக்கா?
குந்தவச்சிப் பேச,
படுக்க,ஒரு பாயிருக்கா
பார்! 7
மேலருந்து வாரியே..!
மச்சானப் பாத்தியா..?
காலலம்ப ஆளிருக்கா..?
காசிருக்கா..? – நாலெலும்பு
நாயகன் போனபின்னே
நாதியத்துப் போனேனே..!
வாயருந்த நஞ்சிவாங்கி
வா! 8
-அகரம் அமுதன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக