சனி, 16 ஆகஸ்ட், 2025

என்மகளின் பொன்கை எழுத்து!


வெள்ளைத்தாள் மேலென்ன
வெண்ணிலாச் சில்லுகளா?
பிள்ளைவான் மீன்களின்
பிஞ்சுகளா? – கொள்ளையிடும்
பொன்வைரக் கட்டிகளா?
பூந்தமிழ்த்தாய் மெட்டிகளா?
என்மகளின் பொன்கை
எழுத்து!?
ஒவ்வோர் எழுத்தும்ஓர்
ஓவியம்; கண்களைக்
கவ்வும் வரிகள்நல்
காவியம்; – செவ்வையாய்ச்
செய்கின்ற பத்திகள்
செந்தமிழ்த் தேர்வலம்;
கைகளில்வைத் துள்ளாள்
கவின்!
குண்டுகுண்டாய் உள்ளதே!
கோகினூர் வைரமா?
சுண்டியிழுக் கும்மல்லித்
தோரணமா? – கண்டின்
அழகிருப்பா? வண்டின்
அணிவகுப்பா? எங்கே
பழிகிருப்பாள் வித்தை?
பகர்!
உன்போல் அழகாய்
உலகில் இருப்பதெல்லாம்
மென்கை எழுத்தன்றி
வேறில்லை; – சின்னநிலாத்
தோற்றம் அழகென்று
சொக்காதே; மாதமெலாம்
மாற்றம் அடையும்
மதி!
தட்டெழுத்து ஆகும்
தவிடுபொடி; முந்தைய
வட்டெழுத்து வந்து
வணங்குமடி; – மெட்டெடுத்துப்
பாடும் இசைக்குறிப்பா?
பாயும் நதிவிரிப்பா?
யாதுன் திருக்கை
எழுத்து!?
அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக