யாரும் உரைக்கவில்லை;
யானும் அறியவில்லை;
பேருக்கு நீயும்
செம்பொன் விளைக்கும்
சிநேகிதனுக்கு ஊறென்றால்
கம்மென் றிருப்பேனா
கண்டு!
கோபம் அதுவேறு
கொள்கை அதுவேறு
தாபம் அதுவேறு
தானறிவேன்; - சாபம்போல்
வீடிடிந்த சேதி
தெரியேன்; வியாதிநின்
கூடிடித்த போதுமிதே
கூத்து!
நட்பிலும் நீயில்லை;
நட்பராய் நாமில்லை;
இட்ட இடுகையெனக்கு
எட்டவில்லை; - எட்டத்து
நண்பர்கள் யாரும்
நவிலவில்லை; உன்வாயால்
உண்மை அறிந்திடும்
முன்!
செய்தி தெரிந்திருந்தால்
தேடிவர மாட்டேனா?
உய்யச் சிறிதும்
உதவேனா? – அய்யய்யோ!
காற்றுக்குக் காலுண்டே
கண்டுரைக்க வாயிலையா?
நேற்றுவரைச் சொல்லலையே
நேக்கு!
எப்போதும் உன்நடத்தை
இப்படித்தான்; யாதொன்றும்
செப்பாமல் மூடித்
திரிந்திடுவாய்; - அப்பா!டேய்!
கூறாத காரணம்தான்
கூடா தகன்றதுநான்;
தேரா வரதனே
தேர்!
ஆளாளுக் கோர்திசையில்
ஆட்பட்டோம்; வீண்குறிக்
கோளால் நிறைய
கொடுமையுற்றோம்; - நாளாகி
மாதங்கள் ஆனபின்
வாயைத் திறக்கின்றாய்ச்
சேதங்கள் பற்றிச்
சிறிது!
கொடுக்கும் அளவிற்குக்
கொண்டுள்ளேன்; யார்பை
எடுக்கும் அளவில்நான்
இல்லை; - விடுத்திருந்தாய்
செய்தியென் றால்வந்து
சேர்ந்திருப்பேன்; சூழ்நிலைக்
கைதியாய் ஆக்கிவிட்டாய்
கண்டு!
நேற்றைக்கு முன்தினம்
நேர்ந்ததா நம்முறவு?
சாற்றுமே வெண்பாக்கள்
சத்தியத்தை; - மாற்றம்
நிகழ்ந்தது உண்மைதான்
நேசத்தில்; மூலம்
அகழ்தலிப்போ தில்லை
அழகு!
கொட்டும் மழைக்குக்
குடைசாய்ந்த வீடுவிட்டுக்
கெட்டலைந்த சேதிசெவிக்
கெட்டலையே – மொட்டுமகன்
தூங்க வழிகேட்டால்
தோளில் இடம்தந்து
தாங்கி இருப்பேன்நான்
தான்!
எல்லாம் முடிந்தபின்னே
எப்போதும் போல்என்முன்
கல்லான நெஞ்சைக்
கவிழ்க்கின்றாய்; – பொல்லாத
பாவிநீ என்னையும்
பாவியாய் ஆக்கிறாய்;
கேவிழகு கின்றேன்
கிடந்து!
ஏடி வரதராசன்
வெறுப்பதை எல்லாம்
வெறுத்துவிட்டேன் என்னில்
இருப்பதை எல்லாம்
இழந்தேன் -- கருப்புநாள்
ஒன்றுதான் வாரும்
உணர்வீர் அதுவெனக்கோ
என்றும் இருக்கிறது
இங்கு.
என்பிள்ளைக் கேட்டதால்தான்
என்னுள்ளே ஆத்திரம்
உன்மீது காட்டி
உளறிவிட்டேன் -- நண்பா.....
மனமுடைத்த ஒன்றை
மறுக்காதே உந்தன்
குணமறிவேன் அன்பில்நீ
குன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக