சனி, 30 ஆகஸ்ட், 2025

 ஓரமா மேயாமே

ஊரான் வயலரொம்ப
நேரமா மேஞ்சி
மெதிச்சிவெச்சா – வார
பெரச்சனைய நீயா
பிரிச்சிவெப்பே? எந்தப்
பறச்சிமவ மாடும்பான்
பாத்து! 01
வாயக்கட் டாமே
வயித்தக்கட் டாமேநீ
மேயப்போ னாவருது
வில்லங்கம்; – பாயப்போட்டு
அஞ்சி நிமிஷமென்னால்
கண்ணசர ஆவுதா?
கொஞ்சமா கட்டுறநீ
கூத்து? 02
வெதச்சவய எல்லாம்
வெளைஞ்சிவரும் நேரம்
விதிச்சிருக்கா நீபோயி
மேய? – குதிச்செழுந்து
கும்மாளம் போட்டுக்
கொலையறுக்க ஊரான்எங்
கம்மாள ஈப்பானே
அங்கு! 03
கண்ணு முழிபுடுங்கிக்
காக்கைக் கிரையாக்கிப்
புண்ணு முழியிலமண்
போட்டரக்கித் – தண்ணியில
முங்கி எடுத்துன்ன
மூலையிலப் போட்டாத்தான்
இங்கெரிச்ச தீரும்
எனக்கு! 04
நெல்லமேஞ் சாத்தான்
நெறையுமா ஒன்வயிறு
புல்லமேஞ் சாக்காப்
புடைக்காதா? – கல்லுளி
மங்கன்போல் பார்வைய
மாத்தாத, இன்னிக்குன்
பங்கத்த வாங்கலன்னா
பார்! 05
காத்தால போனஉன்னக்
காடெல்லாந் தேடிநாஞ்
சூத்தால் நகந்தே
சொணங்கிட்டேன்; – பாத்தாலும்
பாக்காம மேயுறநீ?
பார்எந்த சாமிவந்து
காக்குதுன்னுப் பாக்குறன்நான்
காட்டு! 06
நொண்டிநொண்டி நீநடக்க,
நோய்ப்பட்டுக் கால்கடுக்கத்
தொண்டியொன்னு போட்டாத்தான்
தொல்லையறும்; – மண்டியில
தேடித் திரிஞ்சிஒரு
தேக்க மரத்துண்டைக்
காடியில ஏத்திவரேன்
கண்டு! 07
வைக்கோலப் போட்டா
வயிறுமுட்டத் திங்காம,
கைக்கோலக் கண்டுங்
கலங்காம, – மைக்கண்ணு
தேடுதா பச்சவய?
தின்னு தெனவெடுக்க
ஓடுதா கால்கள்
ஒனக்கு!? 08
மேச்சவய மேக்கே
விரிஞ்சி கெடக்கயில,
காச்ச வயதெக்கே
காங்கயில, – பாச்சவய
கண்ணுல நிக்கிதா?
கால்கள் பரபரத்து
மண்ணுல நிக்கிதா
மாடு!? 09
உசாரா உனையின்றே
ஓட்டி,எண்ணப் போறேன்
கசாப்புக் கடைக்குவித்தக்
காச; – ரசாக்குபாய்
கேட்டுங் கொடுக்காத
கேனச் சிறுக்கியின்னு
ஆட்டுறியா வால?நல்லா
ஆட்டு 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக