வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

வெட்டியான் வெண்பா


மற்ற வனுக்கு
மறந்தும் குழிபறிக்க
எத்தனிக் காதவன்தான்
என்றாலும் - செத்தவனுக்கு
ஆறுக்கு ரெண்டே
அடியில் பறிப்பதெலாம்
சோறுக்காய்ச் செய்யும்
தொழில்! 01
இற்றைப் பிணந்தூக்கி
நாளை பிணங்க(ள்)வரச்
சற்றே வறுமையைத்
தண்டிப்பான்; – அற்றைமட்டும்
காய்ந்த வயிற்றுக்குக்
காய்ச்சிய கஞ்சியாய்
வாய்த்திடும் வாய்க்கரிசி
வாய்க்கு! 02
தூங்கும் மயானம்
துள்ளி விழித்தது
வாங்கும் பிணத்தின்
வருகையால் - ஆங்கிவனின்
தூங்கா வயிற்றுக்குத்
தூக்கம் கிடைத்தது
ஏங்காமல் செல்லும்
இரா! 03
நீட்டிப் படுத்தவனை
நீள்குழியில் போடுதற்கும்
மூட்டிப் பெருந்தீயில்
முங்குதற்கும் - வாட்டமுடன்
வெட்டியாய் ஊர்நிற்க
வேலைகள் பார்ப்பவன்பேர்
வெட்டியான் என்னே
வியப்பு! 04
செய்தொழில் தெய்வமென்றால்
செத்த பிணமிவனுக்கு
ஐயமின்றித் தெய்வத்தின்
அம்சம்தான்; – பையஇவன்
வெட்டும் கருவறைக்கு
வேறுபெயர் கல்லறையென்று
இட்டவனை அங்கே
இடு! 05
இல்லார் பிணமென்ன?
உள்ளார் பிணமென்ன?
எல்லாமும் ஒன்றே
இவனுக்குச் – செல்வர்
படைபலமா சாவைப்
பயமுறுத்தக் கூடும்?
நடைபிணங்காள்! கட்டும்
நடை! 06

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக