போராட வெச்சீக;
நாயவிடக் கீழா
நடத்துறீக; – தீயதெல்லாம்
ஊரில் நடைபோட
ஒன்னாக் கடைபோட
பாரினிலே எங்கநெல
பாழ்! 01
வேல நெரந்தரம்
வேண்டித் தனியாரின்
காலப் புடிக்கவெச்ச
காப்பாளா! – மாளவாச்சும்
நல்ல வழிசொல்லு;
நாங்கத் தவிக்கிறோமே
அல்லும் பகலும்
அழிஞ்சு! 02
நாத்தத்தப் பாத்தோமா?
நாகரிகம் பாத்தோமா?
மூத்த குடிப்பெரும
முக்குனோமா? – காத்துபுகும்
மூக்கத்தான் மூடினோமா?
முன்னேறா எங்ககுடிச்
சோக்கத்தப் பேணினோமா?
சொல்! 03
சோக்கம் – சுத்தம், தூய்மை.
பணிய நெரந்தரம்
பண்ணுவேன்னு சொல்லிக்
குனியவெச்சி ஏறினீக
கோட்டை; – தனியாரு
தந்த பணத்துக்குத்
தாரைவார்த் தெங்களோட
வெந்தபுண்ணில் வீசுறீக
வேல்! 04
எச்ச எலபொறுக்கி,
எட்டூரு தான்பெருக்கி,
பிச்சயெடுக் காம
பிழச்சோமே; – அச்சிறிய
வேல நெரந்தரத்த
வேண்டிப்போ ராடுறோமே
வேலகெட்டு வெக்கிறீக
வேட்டு!? 05
பேண்டதை அள்ளும்
பெரியவேலை வேணுமுன்னா
ஆண்ட வனைக்கேட்டு
அடம்புடிச்சோம்? – ஆண்டவனும்
கைவிட்டான்; ஆள்பவனும்
கைவிட்டான்; போலீஸிம்
கைவிட்டான் மாராப்பக்
கண்டு! 06
சாணியில் கையவெச்சி
சாக்கடையில் கைநனச்சி
கோணியில அள்ளுறோமே
கூறுவெச்சி – தோணிவெச்சித்
தாண்ட முடியாத
சாகரமே எம்பொழப்பு
நீண்டதுயர் நீக்கிடக்கை
நீட்டு! 07
நேற்றென்ன சொன்னீர்
நினைவிருக்கா? ஒன்றையும்
மாற்றா உமக்கு
மதியிருக்கா; - தோற்பதுதான்
எங்க விதியென்றால்
எங்களுக்கு நீங்கெதுக்கு?
ஒங்களுக்கு இல்லையினி
ஓட்டு! 08
குண்டுக்கட் டாகஎமைக்
குண்டாந் தடிபோலீஸ்
கொண்டுகிட்டுப் போறான்
கொலநடுங்க – மண்டுபெத்த
சின்னராசா வாச்சும்
செவிசாச்சா எங்கநெல
என்றென்றும் காணும்
இனிது! 09
கொமட்டுமே இன்னு
குடிநீர் தராம
நமட்டுச் சிரிபுதிர்க்கும்
நாடே – எமக்கொரு
தீர்வுகெடைக் காதா?
திமுக அரசோட
பார்வை கெடைக்காதா
பார்! 10
கிட்டவந்தா நாத்தம்
குடலப் புடுங்குமுன்னு
எட்டிநின்னு குப்பவீசும்
எஞ்சாமி! – தட்டுலஉன்
குப்பயள்ளுங் கையால
சோறள்ளித் திங்கிறோமே
இப்பவாச்சும் பேசேன்
எமக்கு! 11
கேட்டோம் உரிமயத்தான்
கேளாச் செவிகளத்தான்;
மாட்டுக்கும் உள்ள
மருவாதி; – நாட்டுக்குள்
துப்புரவு செய்கிற
தோட்டிகளுக் கில்லையே!
துப்புறது யார்மூச்சில்?
சொல்! 12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக