ஓ...ன்னு கெடந்தே
ஒழுவுது மச்சிவூடு...
ஏன்னுபோய்ப் பாத்தா
வாழ்வாங்கு வாழ்ந்தமவன்;
மாநிலத்த ஆண்டமவன்;
வீழ்வான்னு யார்நெனச்சா
வே! 01
ஊரு தலையாரி
ஊட்டுக்குச் சொல்லிஉடு...
சீரு கொணர்வார்க்குச்
சேதிவுடு… – பேருக்குச்
சொல்லி வரவேணாம்,
சொந்தபந்தம் நூறிருக்கு,
எல்லார்க்கும் போய்ச்சொல்
எழவு! 02
எட்டூரு தாண்டி
இளயமவ வாக்கப்பட்டு
ஒட்டுறவா வாழ்ந்திருக்கா
ஊர்மெச்ச; – சட்டுன்னு
பீதி கிளப்பாம பேசி
அழைச்சிவர
ஆதிமூலத் தான
அனுப்பு! 03
தென்னங் குருத்துல
தோரணங்க கட்டிவா..!
வன்மூங்கில் பாடைக்கே
வாங்கிவா..! - முன்னால
வாச லுலசாத்த
வாழமரம் வெட்டிவா..!
வாசப்பூ மாலகட்டி
வா..! 04
கொட்டும் பறமோளம்
கொட்டட்டும்; பூந்தேரு
கட்டும் பணி,கல
கட்டட்டும்; - வெட்டியான்,
வீட்டுத்தோப் போடகுழி
வெட்டட்டும்; சாராயம்
போட்டவன்லாம் ஆட்டத்தப்
போடு! 05
சாரசா ரையா
சனம்வருது; துக்கத்தில்
யார எவரதான்
தேத்துறது? – ஊரழுத
கண்ணீர் அவுத்துவுட்ட
கால்செருப்பக் கொண்டுசெல்ல...
உண்ணாத வாய்க்கில்ல
ஓய்வு!? 06
மண்டையில மண்டையில
மாருல மாருல
கண்ட படியடிச்சிக்
கத்துனா – தொண்டதண்ணி
வத்துமே யல்லாம
மாஞ்ச உசிர்வருமா?
செத்தநேரம் குந்து,வரும்
தெம்பு! 07
மாத்திவெக்க வேணும்
மடிநெறயச் சில்லரைய...
காத்தருக்க வேணாம்,
கடன்நிறைய... – சேத்துவெச்ச
சொத்துக்குச் சண்ட
தொடங்கிடக் காத்திருக்குப்
பத்துக்கும் மேல
படை! 08
செவுட்டுப் பயக்கிட்டச்
சேதிசொல்லி உட்டா
நவுத்தி வருவானா
நாதி? – அவுத்துவுட்ட
ஆட்டுமந்த போல்சனம்
அந்திக்குள் ஊர்வருமா?
போட்டுவெக்க வேணாம்
பொணம்! 09
வாழ்ந்த கதசொல்லி
வாயார வாழ்த்துறவன்
தாழ்ந்த கதசொல்லித்
தாழ்த்துமுன் – சூழ்ந்தழுவும்
பெண்களெலாந் தள்ளப்
பிணத்த எடுத்துறணும்...
விண்ணோக்கி வீசுடா
வேட்டு! 10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக