சனி, 16 ஆகஸ்ட், 2025

காடெல்லாம் வெம்பருத்திக் காய்ப்பு

 

அம்புட்டுக் கத்தரிக்கா
அப்பெல்லாம் எங்கூரில்
கும்பிட்டு வாங்கசனம்
கூடிவரும்; – தெம்பூட்டும்
நெய்வடிக்கும் தேன்சுவையால்
நெஞ்சத்த அள்ளிவிடும்
பொய்க்கனவாப் போச்சுதுஇப்
போ! 01
வெயில்காலம் வந்ததுன்னா
வெள்ளரிக்கா காய்க்கும்
வயித்துக்குத் தண்மையா
வாய்க்கும்; – பயிரிதுபோல்
காச உடனடியாக்
கண்ணால பாக்கஇந்த
தேசத்தில் வேறஇல்ல
தேர்வு! 02
கரும்பொரு பக்கம்
கதிர்கம்போர் பக்கம்
திரும்பிய பக்கமெல்லாம்
செந்நெல்; – விரும்பிவந்து
சிட்டினங்கள் ஆனமட்டும்
தின்றுவிட்டு ஏப்பமிடும்
பட்டிதொட்டி இன்றாச்சே
பாழ்! 03
சாரசா ரையா
சனம்போகும்; போகையில
காரசார மாக
கதைபொகும்; – தூரமா
போய்க்கடலை ஆஞ்சிப்
பொழுதோட வீடுவரும்;
வாய்க்குமா காட்சிமீண்டும்
வந்து! 04
எருமைக்கும் பஞ்சமில்ல;
என்றுமதன் பால்நெய்
பெருமைக்கும் பஞ்சமில்ல;
பேணும் – எருமை
பொறுமைக்கும் பஞ்சமில்ல;
புத்துலகத் தாலே
வெறுமையாச்சு மந்த
வெளி! 05
நெல்வயல்கள் எல்லாமும்
புல்முளைத்த போட்டலாச்சு;
கல்முளைத்து நிற்கின்ற
காட்சியாச்சு; – சொல்வதெனில்
வீடெல்லாங் கட்ட
விலைபோ னதுபோகக்
காடெல்லாம் வெம்பருத்திக்
காய்ப்பு! 06

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக