சனி, 16 ஆகஸ்ட், 2025

எம்பாடு மோசந்தான் இன்று!

 

கால உணவெடுக்கக்
காலத்தத் தாழ்த்துனா
வேலயக் காட்ட
வெளிப்படும்; – மால
தொடங்கும் வலியால
தூக்கமே போவும்
அட!இந்த அல்சர்
அராத்து! 01
லேசா அணுகிடும்
லேசில் அகலாது
சா!சா! எனவென்னச்
சாவடிக்கும்; – பேசாம
நாம்பாட்டுக்கு ஓரம்
நவுந்து படுத்தாலும்
தாம்பாட்டுக்கு ஆடும்
சதிர்! 02
ஊரே உலக்கயால்
ஓங்கி இடிச்சாப்போல்
யாராரோ அம்மி
அரச்சாப்போல் – தீராத
வெம்பகயார் ஏறி
மிதிச்சாப்போல் தானிருக்குந்
தும்பம் இதுபெருந்
தொற்று! 03
எரதின்ன பாம்பாட்டம்
இங்குமங்கும் பாயில்
சரசரன்னு நாங்கிடந்து
சாடப் – பரபரன்னு
தண்டு வடமுருவிச்
சத்து களஉறிஞ்சிக்
கொண்டாற்போல் தான்நடக்கும்
கூத்து! 04
இந்த முதுவுவலி
இன்றுவரக் காரணம்
நொந்த வரதனின்
நோய்பாக்க – முந்தியதால்
கால உணவுஒரு
கால்மணி தள்ளியதில்
வேலயக் காட்டுது
விட்டு! 05
எதுக்கு வருதுன்னு
எவங்கண்டான்? இந்த
முதுவு வலிரொம்ப
மோசம்; – அதுக்காக
ஆறு மணிக்கெல்லாம்
ஆகாரம் சாப்பிட்டா
மாறுமா இந்த
வலி? 06
விலாஎலும் பெல்லாம்
வெறிபிடிச்சிப் போயி
சலார்சலார் இன்னுதான்
சாத்த – மலார்இன்னு
தண்டு வடம்முறியுஞ்
சத்தஞ் செவிகேக்கும்
பொண்டுபோல் நான்நெலியும்
போது! 07
பொண்டு – பெண்டு (பேச்சு வழக்கு)
எட்டு மணியளவில்
எம்மவ பட்டுக்கால்
இட்டு மிதிக்க
இதமாச்சு; – விட்டகன்ற
பத்தாம் நிமிஷம்
பரவிவலி குந்துச்சி
செத்தாம் மனுஷன்னு
சேந்து! 08
பாயே பயப்பட்டுப்
பாதி இரவெழுந்து
நோயே!ஏங் கொல்லுறன்னு
நொந்தழும்; – நாயேனைச்
சங்குல ஏறித்
தரிச்சி முதுவுவலி
நொங்குற அந்த
நொடி! 09
‘ஆ’இன்னா பையன்
அரைத்தூக்கம் போயிடும்
‘ஈ’இன்னா பிள்ளை
எழுந்திடுவா – ‘ஊ’இன்னா
சம்சாரம் தூக்கந்
தவுத்துப் பயந்திடுவா
எம்பாடு மோசந்தான்
இன்று! 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக