நன்மணிலாக் கொட்டைவயல்
காலும் சிறுமொச்சை
காய்த்தவயல் - மேலுமிளம்
வெண்டைசுண்டை பூத்தவயல்
வெண்பருத்தி பார்த்தவயல்
அண்டைவே லிக்கிரையாய்
ஆச்சு! 01
வீட்டுக்குப் பக்கத்தில்
வீற்றிருக்கும் தங்கவயல்
மாட்டுக்குத் தீவனப்புல்
வாய்த்தவயல் - கூட்டுக்குள்
குஞ்சுக்கும் பார்த்துணவு
கோணாமல் தந்தவயல்
நெஞ்சுக்குள் இன்று
நெருப்பு! 02
சுற்றிலும் வேலிகள்
சூழச் சுருண்டவயல்
ஒற்றையடிப் பாதையின்றி
ஓய்ந்தவயல் - வெற்றுடம்பாய்
வான்பார்த்துக் கண்ணீர்
வடித்து வறண்டவயல்
தான்பார்த்து வெட்கும்
தனை! 03
நித்தம்என் காற்சுவடை
நெஞ்சில் சுமந்தவயல்
கொத்தும்என் கைப்பிடித்துக்
கொஞ்சும்வயல் - பித்தென்றால்
போய்நான் அமரப்
பொறுமைசொல்லித் தந்தவயல்
தேய்பிறைபோல் ஆனதின்று
தேய்ந்து! 04
அப்பில்லாக் குட்டைக்கு
அடுத்தவயல் சோதனையாய்
முப்புறம்கல் வேலி
முளைத்தவயல் - அப்புறமும்
விற்றுத் தொலைக்க
விருப்பமின்றி விட்டவயல்
கற்றுக் கொடுத்தபெருங்
காடு!
அகரம் அமுதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக