சனி, 30 ஆகஸ்ட், 2025

தொட்டிமீன்

 

தொட்டிமீன் ஆகித்
தொகைக்கு விலையாகி
வெட்டிமீன் ஆனேன்
வெறுமையில்; – எட்டுக்கு
நாலில் நகர்கிறது
நாட்கள்; கனவிலும்
காலின்கீழ் கண்ணீர்க்
கடல்! 01
நான்குநாள் மாற்றாத,
நன்னீரே ஊற்றாத,
மீன்தொட்டி என்னும்
வெளிர்சிறையில் – நான்பொறுக்க
ஆகாத துன்பத்தில்
ஆயுள் கழிகிறது
சாகாமல் உள்ளம்
சலித்து! 02
மண்புழுவும் வேண்டாம்
மனிதா! மனமிறங்கிக்
கண்டொரு தூண்டிலிடு
கவ்வுகிறேன்; – கொண்டபெரும்
சோகத்தைச் சொன்னால்
சுமையறுமா? சட்டியிலே
வேகத்தான் வேண்டும்
விடு! 03
தொட்டிநீர் மாறலாம்
தொட்டியும் மாறலாம்
மட்டிலா என்கண்ணீர்
மாறுமா? – மொட்டுவிடும்
காற்றுக் குமிழிபோல்
கண்ணாடித் தொட்டிவிட்டுத்
தோற்றம் மறையுமா
சொல்! 04
பதங்களில் வேண்டுமெனில்
பார்க்கலாம்; யார்க்கும்
சுதந்திரம் என்பதெல்லாம்
சும்மா; – மதங்களும்
கொள்கையும் வீடும்
கொடுஞ்சிறைதான்; இங்கவற்றைத்
தள்ளுவதும் கூடத்
தளை! 05
நாலடிக்குள் வாழ்க்கை
நடத்துகிறேன்; நீங்களிந்த
ஞாலத்துள் வாழ்வை
நகர்த்துகிறீர்; – காலடிகள்
நான்குவைத்தால் தீர்ந்துவிடும்
ஞாலத்தோ டொப்பிட்டால்
மீன்தொட்டி ஞாலத்தின்
மேல்! 06

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக