உருக்குலைந்த தோற்றம்,அவன்
கட்டிய வேட்டி
கடுங்கந்தல், – பட்டினியைச்
சாவுக்கு உணவாக்கிச்
சாலை தனில்வரைவான்
தேவுக்கு அலங்காரம்
செய்து! 01
தெருவாய் அமர்ந்திவன்
தீட்டோ வியத்தில்
திருவாய் மலர்ந்திருக்கும்
தெய்வம்; – ஒருவாய்
உணவும் வழங்கா
உதவாக் கரைக்குத்
தினமும் இவனால்
சிறப்பு! 02
சின்னக் கரித்துண்டில்
தேசத் தலைவ(ர்)களை
என்னமாய்க் கண்முன்
எழுப்புகிறான்!; – முன்விழும்
சில்லரைக் காகத்
திறமை செலவழித்தும்
வல்லவனுக்கு இல்லையே
வாழ்வு! 03
காலக் கொடுமையெனக்
காத்துக் கிடக்கின்றான்
காலணா நாலணா
காசுக்கு; – காலமகள்
கண்ணைத் திறந்தாளா?
காலமெல்லாம் சாலைமகள்
கண்ணைத் திறப்பானைக்
கண்டு!? 04
எண்ணமயம் எல்லாம்
எழுதி அதற்கேற்ப
வண்ணமயம் யாவும்
வழங்குகிறான்; – கண்ணமையப்
பெற்றவர்கள் கண்டு
பெயராமல் நிற்கின்றார்
விற்பனம் ஆகவில்லை
வீண்! 05
மாதமெல்லாம் வந்து
மருந்திடுவான் ஊரவர்தம்
பாதமெல்லாம் புண்செய்த
பாதைக்கு; – சேதம்
சரிசெய்யக் கைகளில்
சல்லிக்கா சேது?
கரித்துண்டு தானே
களிம்பு! 06
சாலைச் சிலுவையில்
சாத்துகிறான் ஏழ்மையைக்
காலை முதலே
கடைத்தெருவில்; - மாலையில்
மல்லிகைப் பூப்போல
சில்லரை அஞ்சாறை
இல்லுக்குப் போவான்
எடுத்து! 07
குட்டிக்கண் காட்சியைக்
கொண்டு வருகின்றான்
வெட்டிச் சனமுலவும்
வீதியில் – எட்டிக்
குதித்தங்குக் காண்கின்ற
கூட்டம் திறமை
துதித்தங்குத் தந்ததா
துட்டு!? 08
பிக்காசோ பார்த்தால்
பிரம்மித்துப் போய்விடுவான்;
டக்கர் எனச்சொல்வான்
டாவின்சி; – லக்கில்லா
ராஸ்கல்என் பானே
ரவிவர்மன்; ஏதுமுண்டா
பாஸ்மார்க் எடுத்தும் பயன்!? 09
இந்தக் கரித்துண்டால்
இங்கிவன் தோற்றத்தை
வந்துச் சரிசெய்யும்
வாய்ப்பிருந்தால் – அந்திக்குள்
ஆளத் தொடங்கிடுவான்
அண்டத்தை; ஆண்டவனும்
மீளத் தொடங்கிடுவான்
வீடு! 10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக