செங்கல் அணையா
தெருவே அரசவையா
ஆதரவா – பங்கமற
நீளும் விழிப்பார்வை
நீதிக்குச் சாட்சியா
ஆளுமே ஆண்மை
அரசு! 01
சட்டெனக் கால்தூக்கிச்
சம்மணம் போடாமல்
அட்டணக்கால் போட்டுத்தன்
அம்மணத்தைப் – பட்டென
மூடி மறைத்தவிதம்,
முன்தொப்பை தான்சரிய
நாடி அமர்ந்தவிதம்
நன்று! 02
கொற்றக் குடையெதற்குக்
கொன்றொழிக்கும் வாளெதற்குப்
பற்றியர சாளப்
படையெதற்கு – வெற்றிமேல்
வெற்றி எதற்கு
வெறிகொண்ட போரெதற்கு
வெற்றுக்கை கொண்டானிவ்
வேந்து! 03
அம்பிக்குப் பாடலாம்
அரகரா, இங்கிவனின்
கம்பீரம் எல்லார்க்கும்
கைவரா, – தம்பியிவன்
மூவேந்தர் காணா
முடியாட்சி செய்கின்றான்
நாவேந்தும் மௌனத்தால்
நன்கு! 04
மூக்குச் சலியொழுக
முன்தொப்பை தானொழுக
நாக்கில் உமிழ்நீர்
நறையொழுகத் – தூக்கஒண்ணா
நல்குரவு தேகத்தில்
நன்கொழுக்கக் கண்டபின்னும்
வல்லரசு கட்டுகிறான்
வந்து! 05
என்னஒர் தோரணை,
ஏழ்மையிலும் பூரணை,
மன்னவன் தோற்கடித்தான்
மாரனை, – சின்னவனின்
அம்மணம்போல் நாமும்
அனைத்தும் துறந்துவிட்டால்
கும்மெனத் தானிருக்
கும்! 06
முற்றும் துறப்பான்
முனிவன்; முதன்முதலில்
முற்றும் துறந்தான்
முதல்வனிவன்; – வெற்றுளமே
வேந்தனுக்கு வேண்டுமென்று
வேடிக்கை யாச்சுட்டும்
மாந்தனிவன் நாடில்லா
மன்! 07
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக