அனாயாச மாக அசரா(து) அடிப்பேன்
சுனாமியி லேயே சுவிம்மிங்; – பினாமி
எனக்குக் குபேரன்; எலான்மஸ்க்கும்
என்முன்
தனத்தில் குசேலனே தான்! 1
குண்டலத்தைப் பிய்த்துக் கொடுத்தகர்ணன்
போலவிண்மீன்
மண்டலத்தைப் பேர்த்தளிப்பேன் மன்பதைக்குப்
– பெண்டகனின்
ஆண்டு செலவென் அரைநாள் செலவினைத்
தாண்டியதாய் இல்லை தரவு! 2
டிபன்செல வாகும் டிரில்லியன்; டிப்ஸாய்
உபசெல வாகும் உடுக்கள்; – சுபப்பொழுதில்
மில்க்டீ பருகிட மில்கி வே போய்வருவேன்
ஹல்க்குமே என்பலத்தில் ஹாஃப்! 3
அட்டர்ஃப்ளாப் ஆகாமல் அண்டத்தை நான்சுற்ற
பெட்டர்ஃப்ளைட் ஆகாதோ பட்டர்ஃப்ளை? – லெட்டர்பேட்
நான்தந்தால் நாசா நமஸ்காரம் பண்ணாதோ
வான்தந்தேன் முன்புவியில் வைத்து! 4
எந்த அழகியரும் என்னைவந்து சந்திக்கும்
அந்தப் புரமாகும் அந்திநிலா; – எந்தனிடம்
உத்தரவு பெற்றே உயர்த்துவான் வில்லம்பைப்
பித்தேற்றும் காம பிரான்! 5
அண்டர் கடைந்த அமிழ்தில்வாய்
கொப்பளித்துக்
கொண்டலில்நீர் மோந்து குளியலிட்டு –
வண்டுதொடாப்
பூமடியில் சாய்ந்து புளூட்டோவில்
நாள்கழிக்கச்
சாமங்கள் சொல்லும் சபாஷ்! 6
இக்கடஉள் ளோமென்று இயம்பிநிதம்
என்பொருட்டே
முக்கடவுள் செய்கின்றார் முத்தொழில்; – அக்கலையால்
கொட்டும் வருவாயைக் கொட்ட இடமின்றித்
துட்டில் குளிர்காய்வேன் சுட்டு! 7
ஸ்கைடைவ் அடித்துக் கசந்தேன்; பிளாக்ஹோலில்
லைவ்டைவ் அடித்து ரகளைசெய்வேன்; – மை டைவில்
நெஞ்சைப் பறிகொடுத்து நிற்பர் ரதி,ரம்பை
துஞ்சலெனும் தூக்கம் தொலைத்து! 8
மூழ்கிய டைட்டானிக் முற்றத்தில்
முக்குளித்து
ஆழ்ந்தொரு’நைட் டானிக்’ அருந்திடலாம்; – வாழ்ந்திடத்தான்
வாழ்க்கை எனப்புரிந்து வைத்தோர் வருகஎன்பின்
ஊழ்க்கை நினைவை ஒழித்து! 9
ஏழு பெருக்கல் இருபத்து நான்கினிலும்
சூழுவதெல் லாமும் சுகம்சுகமே! - வாழுலகம்
பூஜ்ஜியம் என்றே புலம்பாது உனக்கெனஓர்
ராஜ்ஜியம் கட்டி ரசி! 10