திங்கள், 1 டிசம்பர், 2025

கத்திக் கம்மல்!

 


கத்தியிற் கம்மல் செய்து
காதிலே மாட்டும் பெண்ணே!
புத்தியிற் பொறியும் தட்டப்
புளகித்துப் போனேன் கண்ணே!
புத்தகம் புகட்டி டாத
புதுவகை பாது காப்பை
மெத்தனம் செய்யா மல்நீ
மிரட்டிட அணிந்தாய் ஆப்பை! 01
பொன்னணி காதில் மாட்டிப்
போவதால் களவே மிச்சம்;
சின்னதோர் கத்தி மாட்டிச்
செல்வதால் கள்வர்க் கச்சம்;
சின்னவீண் செய்தி கூடச்
செவிகளைத் தீண்டல் தீது;
என்பதைச் சுட்டத் தானோ
இணைகத்தி அணிந்தாள் மாது? 02
கத்தியின் வேலை என்ன
காய்கறி வெட்டல் தானே...
சொத்தையை வெட்டி நீக்கும்
தொழிலினைச் செய்தல் தானே...
எத்தனை பேர்கள் பேசி
ஏய்த்திட முயலக் கூடும்...
எத்தரைக் கண்டால் கத்தி
இடுப்பிலே இறங்கக் கூடும்! 03
குத்திய காதைப் பேச்சால்
குத்திட முனையும் யாரும்
குத்துகள் படுவார் என்னும்
குறிப்புகள் தந்தாள் பாரும்;
அத்துகள் மீறு வோரை
அடக்கிடும் பொருளைத் தீட்டிப்
பித்தரை எச்ச ரித்தாள்
பெண்ணிவள் காதில் மாட்டி! 04
அவசியம் கத்திக் கம்மல்
அணிவதைச் சட்டம் செய்வீர்;
அவசர மாக அஃதை
அமல்படுத் திடவும் செய்வீர்;
தவறுகள் நடக்கும் முன்னம்
தடுப்பதே அரசின் வேலை
கவர்ந்திடும் வண்ணம் செய்து
காட்டினாள் அழகு வாலை! 05
அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக