புதன், 1 ஏப்ரல், 2026

கையலம்புதல் கடமை!


இருவேளை கழி!
இருவேளை குளி!
இருவேளை வாயை
ஈறழுந்த தேய்!
இருவேளை என்பது
இவற்றிற்குப் போதலாம்;
அறுவேளை அலம்பினும்
அகங்கைக்குப் போதாதே!
மூக்கினைச் சிந்தவும்…
முடியினைக் கோதவும்…
நெற்றியின் வேர்வையை
நீண்டுமே நீக்கவும்…
முகத்தினைத் துடைக்கவும்…
முழியினைக் கசக்கவும்…
மிகைப்படும் அரிப்பினை
மிருதுவாய்ச் சொரியவும்…
வந்தெதிர்ப் பட்டோர்கை
வாஞ்சையாய்க் குலுக்கவும்…
முந்துவது யாதெனில்
முற்றாகக் கையன்றோ!
இத்தனை வேலைகள்
இயற்றிடும் கைகளில்
மொத்தமாய்க் நுண்ணுயிர்
முந்துற வாழுமே!
பொழுதெல்லாம் உழைப்பதால்
பொருட்களை எடுப்பதால்
அழுக்குகள் கைகளில்
அண்டுதல் இயல்பன்றோ!
கனிவான கையெனினும்
காப்புற்ற கையெனினும்
நுணிதான நுண்ணுயிரி
நின்றினம் பெருக்குமே!
விரல்கொண்ட நகங்களை
வெட்டாமல் விடுவதால்
திரள்கின்ற அழுக்கினால்
தீநுண்மி வளருமே!
கையூட்டும் திருட்டுமில்லாக்
கைச்சுத்தம் என்பதால்
புதுநீரில் அலம்பாது
போயுண்ணல் ஆகுமா?
அழுக்கற்ற வேலையே
அன்றாடம் செய்யினும்
இழுக்குற்ற நோய்க்கிருமி
இல்லாமல் போகுமா?
ஆதலால் கைகளை
அழுக்கற அலம்பியே
நாளெலாம் காத்திடல்
நமக்கெலாம் நன்மையே!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக