வியாழன், 9 ஏப்ரல், 2026

நாமாய்ப்போய்ச் சொல்வோம்நம் நெஞ்சு!


பூனை கூற்று!

யாரது என்ஆளா?
என்னையெதிர் பார்த்தாளா?
ஓரவிழி நீர்சொரிஞ்சே
ஓஞ்சாளா? – மாரனிட்ட
அம்புக்கே தேஞ்சாளா?
அங்கங்கள் தீஞ்சாளா?
ம்முக்கே மாஞ்சாளா
மாது!?

ஊருக்குப் போறாளா?
உத்தரவு கோராளா?
பேருக்கும் என்னிடம்
பேசாளா? – யாருக்கோ
காத்திருக் கின்றாளா?
கண்கள் எனக்காய்த்தான்
பூத்திருக் கின்றாளா
பூ!?

இங்கமர்ந்து நானிருக்க
என்னையெதிர் பார்க்காமல்
அங்கெ(ன்)னவே டிக்கை
அவளுக்கு? – பொங்கிவரும்
காதலை நான்சொல்ல
காம்பவுண்ட் ஏறிவந்தால்
வேதனைசெய் கின்றாளே
வீற்று!

சிறுக்கிமகள் நெஞ்சைச்
திருடிவிட யாரும்
குறுக்குவழி வந்துவிடக்
கூடும் – பொறுத்திருந்து
ஏமாந்து போக
இனியும் தயாரில்லை
நாமாய்போல் சொல்வோம்நம்
நெஞ்சு!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக