திங்கள், 20 ஏப்ரல், 2026

வெட்டொன்று துண்டிரண்டு விள்!

 

என்னுள் எழுங்காதல் என்னை விழுங்குதல்போல்

உன்னுள்தோன் றிற்றா உனைவிழுங்க?’ – என்பதனைச்

சட்டென்று சொல்லத் தடுமாறும் காரிகையே!

வெட்டொன்று துண்டிரண்டு விள்!

 

எம்மாம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன்

சும்மானாச் சும்பதில் சொன்னாயா? – அம்மாடி!

ஆக்கினைகள் செய்தாயா? ஆறப் பொறுக்கலையே

ஆக்கப் பொறுத்த அகம்!

 

ஒவ்வொரு நாளுமே ஓர்யுகமாய்ப் போகிறது;

செவ்விழியாட் கெவ்வாறு செல்கிறது? – இவ்விவரம்

பித்துப் பிடித்தவென்முன் பெண்பேதை சொல்லாக்கால்

செத்துத் தொலையலாம் ச்சே!

 

யானை பிடிக்க அகலமாய் ஆழ்பள்ளம்

கானை அடைந்து கடைந்தாற்போல் – தானைப்

படைகொண்டு வந்திப் பயலைப் பிடிக்கக்

குடைந்தாயோ கன்னக் குழி!?

 

பூவுன்னைப் பார்த்தவுடன் புல்லறிக்கும்; பைந்தமிழ்ப்

பாவுன்னைப் பார்த்தவுடன் பல்லிலிக்கும்; – நாவுதிர்க்கும்

மெல்லிசை நச்சரிக்கும்; மேன்மைகளை உச்சரிக்கும்;

எல்லிநிலா பொச்சரிக்கும் இன்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக