புதன், 1 ஏப்ரல், 2026

 

அத்தியூர் வாழ்வரதன் வஞ்சி மகேசுவரி

நெத்திக்குப் பொட்டாக நேர்ந்தனன்; - மெத்தைச்

சுகந்தின்று பிள்ளை சுமந்தீன்று மஞ்சன்

அகம்வென்று வாழ்வாள் அகம்!

 

பாடும் பறவைகள் பந்தம் நிலைபெறக்

கூடும் களியெலாம் கூடலில்; - ஆடும்பொன்

தொட்டில் இரண்டைந்து திங்களில்; ஆமதைக்

கட்டில் உறுதிசெயும் கண்டு!

 

கன்னி யவள்பாடக் கைத்தாளம் போட்டபடி

நண்ணி யவன்பாட நல்லசுகப் - பொன்பொழுதில்

கட்டிலும் பாடும்; கதையறிந்த காரணத்தால்

தொட்டிலும் பாடும் தொடர்ந்து!

 

தானாய் அழுமாம் தளிர்மழலை; போயவளை

ஏனாம்? எனக்கேட்பான் ஏந்தலுமே; - ஆனாலும்

உன்பிள்ளை உன்போலும்; தம்பிக் கழுகின்றான்;

என்பாள்தன் எண்ணத்தை இட்டு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக