புதன், 29 ஏப்ரல், 2026

சாரே! சர்க்காரே!

 




சாரே சர்க்காரே!

 

வங்கிமே லாளரே!

வானளவதி காரரே!

தங்க மனம்படைச்ச

சாரே! சர்க்காரே!

 

அக்கா குருவிபோல்

அன்றாடம் நான்பாடும்

அக்கா புராணம்கேட்(டு)

அலுத்தலுத்துக் கொள்பவரே!

 

சொக்கா கசங்காம

சோலிபாக்கும் படிச்சவரே!

தொக்கா எனைக்கருதித்

துரத்திவிடும் தடிச்சவரே!

 

அருமை குறையா

தரும துரையே!

பெருமை குறையாப்

பெரிய துறையே!

 

என்னாத்தா போலென்னை

இமைக்காம காத்துவந்த

பொன்னாத்தா எங்க‍க்கா

புதைகுழிக்குப் போயிட்டா!

 

மவராசி செத்து

மாதமிரண் டாச்சுது

அவள்வைப்புக் கணக்கில் - சில

ஆயிரங்கள் உள்ளது

 

பொன்னாத்தா சேத்துவச்ச

பொக்கிஷத்தைத் தாரீரோ?

இன்றேனும் அவள்கதையை

இரண்டுவரி கேளீரோ?

 

நாலணா துட்டுக்கு

நாளெலாம் வேர்வைசிந்திக்

காலணா சேர்க்க‍ - அக்

காளுண்பாள் பழங்கஞ்சி

 

நீராகா ரம்என்றால்

நீர்சிரிக்கும்; அப்படி

ஓராகா ரத்துக்கே

உண்டான வெஞ்சனமாய்க்

 

கார மொளாவைக்

கடிப்பது போல்கடிச்சு

வாரம் முழுசுக்கும்

வச்சிப்பாள் மடிமுடிஞ்சு!

 

பெருந்துயர வாழ்க்கை

பிச்சுப்பிச்சுப் போட்டதுல

தரித்திரம்சொல் லும்சேலை

தச்சுச்தச்சுப் போட்டதுல...

 

ஆம்பளைபோல் பொம்பளைக்கும்

அரைமுழம் கோமணமே

பூமியில போதுமுன்னு

பொதுச்சட்டம் போட்டிருந்தா

 

கிழிசலுக்குச் செலவுசெஞ்ச

காசையுமே சேத்திருப்பா

வையத்தை மூனுமுறை

வாங்கியுமே போட்டிருப்பா

 

பொத்திப்பொத்திச் சேத்தபணம்

பொணம்தூக்க வாரலையே

கொத்தாக மாலையொன்னு

கொண்டுவந்து போடலையே

 

முப்பது கும்பிட

முன்னவந்து நிக்கலையே

இப்ப வரைக்கும்

என்கைக்குச் சிக்கலையே

 

இறவான இடுக்கிலே

எஞ்சியதைச் சேத்துவச்சா

மறவாம மோடிவந்து

மதிப்பிழக்கச் செய்வான்னு

 

வங்கியில் போட்டவள்

மாண்டு மடிச்சபின்னே

இங்கெடுக்க ஆகலையே...

எம்பேச்சு மேவலையே...

 

செத்தவளைக் கூட்டிவந்தால்

சேமிப்பைத் தருவோம்னு

ஒத்த வரியில்பதில்

உகுக்கும் மவராசா!

 

ஏழை வயித்துக்குள்

இறைப்பையை வைத்தவனை

பாழை வயித்துக்கள்

பசிவைத்துத் தைத்தவனை

 

இந்தப் பணத்தைவச்சே

ஏன்னுநான் கேட்கோணும்

அந்தப் பசியைஅவன்

அகப்பையில் வைக்கோணும்

 

குட்டிச் சுவத்துக்குக்

கூரையொன்னு போடோணும்

எட்டு மொழத்துக்கு

இடுப்புவேட்டி வாங்கோணும்

 

இறப்புச் சான்றிதழ்

எடுக்கப் பணம்வேணும்

இதற்கேனும் சிலநூறு

எனக்குநீர் தரவேணும்

 

பனையளவு இங்குள்ள

பணங்காசைத் தரவேணாம்...

தினையளவு எம்காசைத்

திருப்பித் தரவேணாம்?

 

சட்டையில்லா என்னைச்

சட்டைசெய் யாமல்

சட்டமே பேசுகிற

சாரே! சபையோரே!

 

இருங்கடா இருங்க - அவ

எலும்புக்கூ டெடுத்துவரேன்

துரும்பாக் கருதுமுங்கள்

தூக்கம் கலைக்கவரேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக