வெள்ளி, 17 அக்டோபர், 2025

வண்ணம்!

 


காக்காக் கலருன்னு
கண்ட படித்திட்டி
நேக்கா எனைமட்டும்
நீக்கிவிட்டுப் – பாக்கவெச்சி,
ஏங்கித் தவிக்கவெச்சி,
எல்லாப் பசங்களும்
கேங்காக ஆட்றாங்க
கேம்ஸ்! 01
பக்கத்து வீட்டுப்
பசங்களும், பள்ளியிலே
பக்கத்து சீட்டுப்
பசங்களும், – நக்கலா
எள்ளி நகையாடி
என்மேல் பகையாடி
‘வள்’ளுன்னு வீழுதுகள்
வந்து! 02
சட்டை உரிக்கின்ற
சாரையைப்போல் என்னாலும்
அட்டியின்றித் தோலுரிக்க
ஆகுமெனில் – குட்டியூண்டு
உள்ளாவி பொங்க
உரிச்சே உடுத்துவேன்
வெள்ளாவி வச்சி
வெளுத்து! 03
வெள்ளை அடிக்கின்ற
வீடு பலபலப்பாய்
உள்ளதுபோல் எந்தன்
உடல்மாற – வெள்ளைப்
பெயிண்ட்டப்பா உள்ளே
குதிச்சிக் குளிச்சி
மயிலுக்கா கப்போறேன்
மாற்று! 04
என்னைக் கழுவி
எடுக்கின்ற நேரத்தில்
இன்னொன்று பெத்துப்பாள்
என்னன்னை; – இன்னைக்கே
மல்லிகைப் பூப்போல
மாட்டுப்பால், கள்போல
நல்வெள்ளை ஆப்போறேன்
நான்! 05
வேள்ளைப் பவுடருமே
வெண்மை இழக்குமென்மேல்
அள்ளிநான் பூசுகிற
அந்தநொடி; – பிள்ளையெனைக்
கன்னங் கரேலென்று
கற்பம் சுமந்தீன்ற
அன்னைக்கு நானே
அழகு! 06
சோகமாய் நானவளின்
தோளில் கிடந்தபடித்
தேக நிறம்சொல்லித்
தேம்புகையில் – ஆகம்
அழுக்கானால் கூட
அதுதெரியா வண்ணம்
பழுப்புநிறம் காக்குமென்
பாள்! 07
வண்ணத்தால் என்ன
வருவதும் போவதும்?
எண்ணம் தெளிந்தால்
எழில்யாவும்; – உண்மையைச்
சொல்லிப் புரியவைத்துச்
சொரும் அவள்மகிழ
முல்லைப்பூப் போல்சிரிப்பேன்
முன்பு! 08
தேனருமை தித்திப்பில்
தென்படுமே அன்றி,நிறம்
தானருமை என்றாஊர்
சாப்பிடுது? – கானக்
குயில்கருமை என்றாலும்
கூவுமிசை நன்று;
மயில்அழகே என்றாலும்
மக்கு! 09
உச்சி முடிகறுப்பு
உள்ளங்கால் பொன்சிவப்பு
துச்சம் இவற்றிலெது
சொல்லுங்கள்; – மெச்சும்
சிவப்புச் செருப்பாகத்
தேயக் கருமை
கவனம் பெறுவதனைக்
கண்டு! 10
அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக