வெள்ளி, 17 அக்டோபர், 2025

 வாரி வகிடெடுத்து

வாசப்பூச் சூடுதற்கு
ஓரிரண்டே இஞ்ச்போதும்
ஓதிமயிர்; – யாரிதுபோல்
அள்ளிமுடி பின்னி
அழகாய் அலங்கரிக்க
உள்ளார்என் அன்னையைப்போல்?
ஓது! 1
சீப்பே சிரிக்கும்படிச்
சீவமுடி யாத்தலையைப்
பூப்போல நீவிமலர்ப்
பூச்சூடிப் – பாப்பாநான்
வீதியிலே வந்தால்
விழிகள் எனைமொய்க்கும்
சேதிபல ஊர்சேரும்
சென்று! 2
குதிரைவால் கொண்டை
குமரிகளின் போட்டி
அதிலேநான் வெற்றி
அடைந்தேன்; – நதிமேலே
நாணல்போல் கூந்தல்
நனியசையும் நங்கையரும்
காணஅழ கென்றன்
கதுப்பு! 3
புல்பூத்தாற் போலேஎன்
பூனை முடிபூத்துக்
கள்வார்க்கும் பேரழகைக்
கண்டாலோ – அல்வார்த்த
காரிருள் கூந்தல்
கவிழ்ந்தே மனம்நாணும்;
ஊரிலெனைப் போல்யார்தான்
உண்டு!? 4
நாற்றை முடிதல்போல்
நான்கு முடிமுடிந்து
போற்றும் படியழகாய்ப்
பூச்சூடி – நேற்றெடுத்த
கண்ணினிய போட்டோவால்
கண்நிறைய பட்டதம்மா!
கண்ணேறு நன்றாய்க்
கழி! 5
உள்ளதை வைத்தே
உளம்மகிழக் கற்றவரைத்
தொல்லைகள் என்றும்
தொடராதே; – அள்ளி
முடியத்தான் ஆசை
முடியாது போனால்
படியத்தான் சீவப்
பழகு! 6
இல்லையெனும் பேரில்
இருப்பதைப் பேணாமல்
செல்லுவதில் என்ன
சிறப்புண்டு? – நல்மகிழ்ச்சி
தன்னை அறிவதும்
தன்னிலின்பம் தேடுவதும்
அன்றிவே றில்லை
அறி! 7



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக