ஞாயிறு, 26 அக்டோபர், 2025

இன்பத்தேன் வெண்பா!


பெண்கூற்று
மாலை நிலாப்பொழுது;
மங்கை உனதருகில்;
காலை வரையில்நாம்
கண்விழிப்போம்; - சேலைக்குள்
இன்பத்தேள் கொட்டும்
எழிலை எனக்குரைத்து
இன்பத்தேன் வெண்பா
எழுது!
நெஞ்சுப் பொதிகள்;
நெளியும் இடைசுமக்கும்
பஞ்சுப் பொதிகள்;
படர்ந்தவைமேல் – கொஞ்சித்
துயிலக் கொடுத்துவைத்தோய்!
துய்த்துக் களைவாய்
மயிலின் மனத்து
மயல்!
கன்னம் கடித்துக்
கனியிதழ்த் தேன்குடித்துப்
பின்னும் இளநீர்
பெரிதுண்க; - முன்னம்
அசலைப் பருகி
அனுதினமும் ஆங்கே
பசலை வளர்ந்த
படி!
கடைக்கண் வழியும்
கவினைப் பருகி
உடைக்கண் எனைநான்
ஒளிக்க; - இடைக்கண்
அடைக்கலம் தேடியுன்
ஐவிரல் தாவும்
படைக்கலம் போலும்
பறந்து!
நோகும் எனவெண்ணி
நோகாமல் சிற்றிடை
தாகம் தணிக்கத்
தலைப்படாது - ஆகம்
நொறுக்கி எடுத்துமயல்
நோய்தீர்த்து மீண்டும்
பொறுக்கித் தொடுத்துப்
புதுக்கு!
வள்ளல்நான் வந்து
வழங்கும் பொழுதும்நீ
கொள்ளல் விடுத்துக்
குறிவைத்துக் – கொள்ளை
அடிக்கத் துடிக்கும்
அழகை வியந்து
நடித்துச் சிவக்கும்
நகில்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக