பசும்புல்!
கவிஞன்:-
புல்லே! பசுபுல்லே!
தொல்லை சுமையாகத்
தோன்றாதா? - அல்லெல்லாம்
தேக்கிப் பனித்துளியைச்
சேய்போல் இடைசுமக்கும்
போக்குச் சரியில்லை
போ! 01
புல்:-
கும்மிருட்டு ஈன்ற
குழந்தையிது என்மடியில்
சம்மணம் இட்டுச்
சரிந்தது; - கம்மென,
அங்கம் சொலிக்க
அழகாய் உறங்குகிற
தங்கமிது ரொம்பச்
சமத்து! 02
கவிஞன்:-
ஆர்பெற்ற பிள்ளையோ
அள்ளிநீ கொஞ்சுவதை
ஊர்பார்த்தால் நாறிடுமே
உன்பெருமை; - தீர்விதற்குத்
தள்ளித் தரைவிட்டுத்
தாவணி போடுனக்கேன்
பிள்ளையென மார்பூட்டும்
பித்து!? 03
புல்:-
பூந்திரவப் பிள்ளையிதன்
பொன்முகத்தில் வெண்ணிலவு
நீந்துவது ஆச்சரியம்
நீயேபார்; - தீந்தளிர்
நத்தை;அதன் கூடுபோல்
நன்னீர்த் துளியுளதே
இத்தைக் கவிபாட
எண்! 04
கவிஞன்:-
முத்துமுத்தாய் வேர்த்தஎன்
முந்தாணை பெண்முகத்தை
ஒத்துள்ளாய் நானுமதை
ஒப்புகிறேன்; – முத்துநகை
மூக்குத்தி இட்டு
முழுஅழகைக் காட்டுகிறாய்
ஏக்கத்தைப் பெண்களுக்கே
ஈந்து! 05
புல்:-
அன்பொழுகப் பேசி
அருகில் வராதேஎன்
பொன்மகவின் மென்தூக்கம்
போய்விடும்; – உன்னுடைய
பாராட்டைக் கேட்கவா
பாதையில் நிற்கின்றேன்?
சீராட்டை வேறெங்கும்
செப்பு! 06
கவிஞன்:-
ஆடை அணியின்றி
ஆரும் துணையின்றிப்
பீடைபோல் வாழ்ந்தாய்
பெரும்பகலில்; – வாடை
வரவிரவில் வாழ்வுற்று
வாயாட லெல்லாம்
திரவப்பூ பூத்த
திமிர்! 07
புல்:-
வெளிச்சப்பூ வானில்
விரிகிறது நீபல்
இளித்தவரை போகும்
இடம்செல்! – துளிமகவு
கண்ணிமைக்கும் நேரத்தில்
காணாமல் போனதே
கண்முன்செய் தாயே
களவு!? 08
கவிஞன்:-
வார்த்தை கொடுத்து
வழிப்பறி செய்ததாய்
யார்மீது குற்றம்
அடுக்குகிறாய்? – பார்நானும்
உன்போல் பனிநீர்
ஒழிந்த வகையறியேன்
என்மேல் பழிபோடாய்
இங்கு! 09
புல்:-
என்னை உனையன்றி
இங்காரும் இல்லைபின்
என்பொருளை ஆர்தான்
எடுத்திருப்பார்? – மென்பனிக்கு
இன்னோர் இரவுவரை
எவ்வாறு காத்திருப்பேன்?
பொன்கதிரோன் உண்டிருப்பான்
போந்து! 10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக