புதன், 29 அக்டோபர், 2025

 உழத்தியின் கூற்று:-

தெய்வம் இருக்குதா?
செத்துத்தான் போச்சுதா?
உய்ய வழியொன்னு
உரைக்குதா? – செய்விளஞ்ச
நெல்மணி எல்லாம்
நெனஞ்சி மொளைச்சதே
வல்லடியாப் பேஞ்ச
மழைக்கு! 1
மாடா ஒழைச்சு
மணிமணியா நெல்விளைச்சு
மேடாக் குவிச்சியிங்க
விக்கவந்தா – மூடாம
விட்டுப் புடுச்சே
விடியலர(சு) இத்துடுச்சே
வட்டிக் குழைச்சேஎம்
வாழ்வு! 2
கிடங்கொன்னு கட்டிவிடாக்
கேடுகெட்ட ஆட்சி
எடந்தெரி யாமப்போ
வாதா? – மடப்பயலை
காத்தாளச் சொல்லிக்
கவர்மெண்டில் வச்சாஎன்
சோத்துல வச்சானே
சூடு! 3
சோமபா னத்துக்கு
சோக்கான கோடோனு;
நாமசா கத்தான்
நடுத்தெருவு; – பூமரங்கிள்
ஆளும் அசிங்கத்தை
ஆராச்சும் பேசினா
நீளுதே கைது
நிதம்! 4
உசுரைப்போல் எண்ணி
உழைச்சுவந்த நெல்லைக்
கொசுரைப்போல் எண்ணிவிட்ட
கோனே! – பசிவந்தா
சோத்தத்தான் தின்பாயோ?
சோமபானம் உண்பாயோ?
பீத்துறத விட்டுவிட்டுப்
பேசு! 5
ஆட்சி சரியில்லை
ஆளும் சரியில்லை
காட்சியில் மாற்றம்
கடுகுமில்லை – பேச்சமட்டும்
நல்லா அளந்துவிட்டு
நாட்டைச் சுரண்டுறநீ
எல்லையில்லாத் துன்பம்
இழைச்சு! 6
தில்லாநீ பேச
திமிரா மவன்பேசும்
பொல்லாத காலம்
பொடிபடவே – நல்லாச்
சுழட்டி அடிச்சுவெகு
தூரத்தில் வீசும்
உழத்தி எனக்கிருக்கும்
ஓட்டு! 7
சாராய கோடோனே!
சாராய கோடோனே!
வாராயோ எங்க
வயப்பக்கம்? – பூராவும்
நல்லா மழைநனைஞ்சு
நாசமாப் போயிடுச்சே!
கல்லா மனசுனக்குக்
காட்டு!?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக