புதன், 29 அக்டோபர், 2025

 ஒட்டியே பக்கத்தில்

ஒக்கார் எளங்கொரங்குக்
குட்டியே! எந்தன்
கொறயக்கேள் – பட்டினி
போட்டுட்டான் புள்ள
பொறத்தே தொறத்திட்டான்
ஊட்டுக் கதவடச்சி
உட்டு! 01
பாக்கப் பரிதாபம்
பாட்டா!உன் சோகத்தத்
தீக்க வழியே
தெரியலயே; – ஆக்கித்தான்
ஊட்டமா சோறள்ளி
ஊட்டி உடுவதுக்கு
ஊட்டம்மா இல்ல
ஒனக்கு? 02
அவசெத்து மாசங்க
அஞ்சா யிடுச்சு
தவமிருந்து வாங்கிவந்த
தாரம் – கவனமாப்
பாக்கயிலும் காலன்
பறிச்சிட்டுப் போயிட்டான்
கேக்கநாதி யத்தேன்
கிழம்! 03
வருத்தப் படாத
மனச உடாத
அருத்தமில் லாம
அழாத – கருத்துலவை
நானிருக்கேன் ஒங்கூட
வானிருக்கே நம்கூட
ஏனிடிஞ்சிப் போற
எளச்சு? 04
கையெடுத்துக் கும்பிட்டும்
காசு விழவில்ல
பையிலயுங் காசு
பணமில்ல – செய்யிறதுக்(கு)
ஆருமே வேல
அளிக்கவில்ல இந்நிலையில்
தீருமா எங்கவல
தேங்? 05
ஓடா எளச்சி
உருக்குலஞ்சிப் போயிட்ட
மாடா ஒழச்ச
மவராசா! – ரோடாண்ட
குந்தி விசனிச்சாக்
கூடிசனம் பாக்காதா?
எந்திரி போவோம்
எழுந்து! 06
பத்துநா ஆச்சு
பருக்கைய நானறிஞ்சு
செத்துடுச்சு கண்ணு
திரைவிழுந்து – எத்தனநா
இப்படியே போவும்
எனக்குத் தெரியலயே
எப்பத்தான் போவேன்
எறந்து!? 07
நூறு வயசுக்கு
நோய்நொடி இல்லாம
மாறும் ஒலகத்தில்
மாறாம – வீறுகொண்டு
வைராக் கியத்தோட
வாழ்வே; எதுக்கும்ஒங்
கைரேக பாக்குறேன்
காட்டு! 08
ஆறுதலா வார்த்தைகள
அள்ளித் தெளிக்கும்நீ
கூறுவதக் கேட்டுக்
குடல்நெறஞ்சேன் – மாறுதல்
ஏற்படும்னு தோனல
ஏனோ இறைவனும்
ஆற்றவில்ல எந்தொயரம்
ஆஞ்சு! 09
கூரையில்லா வீடாக்
கொழுந்து மரமிருக்கு
ஊரைவிட்டுத் தூரம்
ஒசந்திருக்கு – நீரையொட்டி
நிம்மதியா வாழ
நெழலிருக்கு எங்கூட
சம்மதிச்சி வந்துடுதாத்
தா! 10





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக