இயற்கைக்கு முரணாக சில நிகழ்வுகள் நிகழ்ந்துவிடுவது உண்டு. நான்முகன் தொடங்கிவைக்க ஆதாம் அடியொற்றிப் பயணித்த பாதை. அவை சம்மதத்தோடு நிகழ்ந்தவை. கீழுள்ள செய்தியில் நிகழ்ந்திருப்பது வன்முறை. அடுத்தவர் எதிர்ப்பை அசட்டை செய்து நிகழ்த்துவது. தாய்க்கு மகனாலும் மகளுக்குத் தந்தையாலும் சகோதரிக்குச் சகோதரனாலும் நிகழ்ந்து விடுகின்ற முரண்தொடை. பாதிப்பென்னவோ பாவைக்குத்தான்.
ஆஸ்திரியாவில் தான்பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின்
பாதாள சிறையில் வைத்து அவள் ‘7’ குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான்
ஜோசப் ஃபிரிட்சல்.
- செய்தி – (2007ம் 8ம் ஆண்டாக இருக்கலாம்)
காமக் கயவனவன்
கைக்குள் சிறைப்பட்டு
சாமப் பொழுதுகளில்
சீரழிந்து - ஊமையாய்
இன்றளவும் வாழ்வில்
இடர்பட்டேன் வேறுண்டோ
என்போல் உழந்தார்
இடர்? 01
தொட்டில் உறவைத்
துளிர்த்துவரும் காமத்தால்
கட்டிலுற(வு) ஆக்கிக்
களித்திட்டான் - இட்டமில்லாத்
தன்மனையைக் கூட
தழுவத் தடையிருந்தும்
என்றனுக்கு இந்தநிலை
ஏன்? 02
கட்டிப் பிடித்தான்;
கனியிதழை மென்றிட்டான்;
தொட்டுக் களித்தான்
துடியிடையை; - எட்டிப்
படுத்தாலும் பாழ்செய்தான்;
பக்கமிருந்(து) இன்பம்
கொடுத்தாலும் செய்தான்
கொலை! 03
அழுது புலம்பி
அவனிருதாள் பற்றித்
தொழுது துவண்டு
துடித்தேன்; - உழன்றேன்;
இனிப்புத்தான் என்மேனி
என்றெறும்பாய் மொய்த்தான்
நினைக்கத்தான் கூசுதென்
நெஞ்சு! 04
சொட்டுத்தேன் என்னைச்
சுவைத்து முடித்ததுகாண்
கொட்டுந்தேள் ரொம்பக்
கொடுமையிது; - கட்டிப்பொன்
தீக்கிடையில் வீழின்
திருநகையாம்; உண்டோசொல்
சாக்கடையில் வீழின்
தகவு? 05
அன்னைக்குத் தன்மகளே
ஆனாள் சகக்கிழத்தி
என்னுமிழுக்(கு) ஏற்பட்ட(து)
என்னாலே; - என்விதி
ஏட்டிலே காணா
எழுத்தாச்சே! என்கதை
நாட்டிலே காணா
நடப்பு! 06
வெங்கானம் தானேகி
வெந்து தணிந்தாலும்
மங்கைநான் முன்புற்ற
மாசறுமோ?- பங்கமெல்லாம்
உற்றும் உயிர்வாழக்
கற்றேனே; பெற்றவனால்
பெற்றேனே துன்பம்
பெரிது! 07
அன்பைப் பொழிந்துநிதம்
அன்னையவள் மஞ்சத்தில்
தன்னை வருத்தித்
தவங்கிடந்து - முன்னம்
கொடுத்தான் உயிரைக்
கொடுத்தவனே கற்பைக்
கெடுத்தான் அருகில்
கிடந்து! 08
தான்பெற்ற பெண்ணென்னைத்
தாரமென்று எண்ணி,என்
ஊன்மீது மோகவெறி
உற்றவனை - யான்பெற்ற
சேய்களெல்லாம் தந்தையெனச்
செப்ப விழைந்திடுமே
தாய்வழிப் பாட்டனைத்
தான்! 09
அப்பனை ஆசையால்
ஆளன் எனவழைக்க
எப்படியென் நெஞ்சம்
இடங்கொடுக்கும்? - அப்படியே
கற்பனையும் காணக்
கடவுவதோ? அய்யோநான்
முற்பிறப்பிற் செய்தவினை
யோ? 10
உறவை மறந்தான்;
உறுப்பரிப்பு உற்றான்;
இரவெல்லாம் என்னோ(டு)
இருந்தான்; - இறைவா!சொல்!
பூமெத்தை மீது
புணர்ந்து சுகங்காணும்
காமத்தை ஏன்வைத்தாய்
கண்டு? 11
கூன்படைத்த நெஞ்சக்
கொடியோன் குடிசையிலே
ஏன்படைத்தாய் என்னை?
இடர்படவா? - ஊன்படைத்த
பெண்ணாய்ப் பிறப்பதினும்
பேயாய்ப் பிறப்பதுமேல்
மண்ணாய் மிதிபடினும்
மாண்பு! 12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக