வியாழன், 25 செப்டம்பர், 2025

தேனிலவு மீன்பிடிப்போம் தேர்ந்து!

தேனிலவு மீன்பிடிப்போம் தேர்ந்து!
ஆத்துமீன் சாப்பிட்டு
அலுத்திருச்சு; வாடுதடா
மாத்துமீன் கேட்டு
மனந்தவிச்சு; – பூத்திருக்கும்
விண்மீனைக் கொண்டு
விருந்து சமைப்போமா?
எண்ணமுன தென்ன?
இயம்பு! 01
துக்கடா மீன்களைத்
தூக்காமல் போகவிட்டுக்
கொக்குறு மீன்களையே
கொத்துதல்போல், – அக்கடான்னு
வானில் உலாத்துகிற
வண்ணவண்ண மீன்விடுத்துத்
தேனிலவு மீன்பிடிப்போம்
தேர்ந்து! 02
மேகம் இடைபுகுந்து
வெண்ணிலவைக் காப்பாத்த
வேகம் எடுத்தால்
விலாவையொடி; – போகவிட்டுப்
பின்னால் நிலாக்குத்தும்
பேச்சுக் கிடமில்லை
சொன்னால்கேள் நண்பா!என்
சொல்! 03
பத்தடி தூரத்தில்
பால்நிலா வந்தஉடன்
குத்தி இழுடா
குடலுருவி; – மெத்தனமாய்
விட்டுவிட்டால் அப்புறம்
வீசிப் பயனில்லை;
சட்டெனக் கம்பெடுத்துச்
சாத்து! 04
புலிக்குத்தி பூதத்தைக்
குத்திப் பிறகம்
புலிக்குத்த வேணுமா
போடா! – நலிச்சுட்டி
நல்லிரவில் ஆளனில்லா
நாயகியைத் தேடிப்போய்க்
கொல்லுவது தான்நிலாக்
கோடு! 05
போகும் விமானத்தைப்
போகவிடு; வான்பயணம்
நோகும் படிச்செய்யும்
நோக்குவிடு; – ஏகும்முன்
வட்ட மதியின்
வயிற்றைக் குறிபார்த்தே
எட்டின தூரம்
எறி! 06
நேற்றைக்கு நானடித்த
நெற்றித் தழும்புடனே
ஆற்றில் குளிக்கவரும்
அம்புலியைக் – காற்றடித்த
வட்டபலூன் மீதூசி
வாகாய் இறங்குதல்போல்
விட்டெறிந்து கைக்கோலால்
வீழ்த்து! 07
வானில் செயற்கைக்கோல்
வட்டம் அடிக்கிறது
வீணில் அதைக்குத்தி
வீழ்த்தாதே; – ஏணிவைத்து
ஏறிச் சரிசெய்ய
ஏகச் செலவாகும்
மீறிஅடிக் காமல்
விடு! 08
தூரம் இருந்தபடி
தோஷம் கொடுத்துமனப்
பாரம் அதிகரிக்கப்
பண்ணுகிற - காரணத்தால்
செவ்வாய்க் கிரகத்தின்
சீவன் முடிப்பதற்குத்
தவ்வி அதையடித்துத்
தா! 09
இடிமேலே ஈட்டி
இறக்கடா! உச்சி
இடியச்சம் காட்டும்
எனக்கே; – கொடிமின்னல்
அஞ்சுசாண் வேண்டும்
அரைஞாண் கயிற்றுக்குக்
கொஞ்சமாய்ப் பிய்த்துக்
கொடு! 10
போடடா பொத்தலைப்
பொத்து வழியட்டும்
காடெலாம் வாடுதே
காஞ்சிப்போய்; – நாடெலாம்
முற்றும் விளைச்சலை
முப்போகம் காணட்டும்
குற்றமில்லை மேகத்தைக்
குத்து! 11
அலைகடலைத் தாண்டிவந்து
ஆங்கிலேயன் ஆள,
குலைநடுக்கிக் கப்பம்நாம்
கட்ட, - நிலைகொண்டு
நின்ற துருவமீன்
நிச்சயக் காரணம்;
கொன்றழிப்பாய் அந்தக்
கொசுறு! 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக