ஞாயிறு, 26 அக்டோபர், 2025

காய்ச்சல் வெண்பா

 காய்ச்சல் அடித்திடுது

கால்கை கடுத்திடுது
ஓய்ச்சலின்றி நாசி
ஒழுகிடுது - போய்முந்தா
நாள்மாலை பச்சைத்தண்
ணீர்க்குளியல் போட்டதில்
ஆள்கொல்லு கின்ற(து)
அனல்! 01
கணகணக் கின்றது
காயம்; வறண்டு
தொணதொணக் கின்றது
தொண்டை; – சணல்திரிபோல்
மீசை முடியும்
மிகவே பொசுங்கிடுது
நாசிவிடும் சூட்டில்
நசிந்து! 02
காதடைக் கின்றதுடல்
காளவாய் ஆகிறது;
சாதம் சமைத்துத்
தருகிறது – ஆதரவாய்க்
கால்லிட்டர் தண்ணீரைக்
காயத்தின் மேல்வைத்தால்
கால்நொடியில் வெந்நீராய்க்
காய்ந்து! 03
ரம்பத்தால் என்மூக்கை
ராவுவது யார்?தடித்த
கம்பத்தை விட்டுக்
கடைவதுயார்? - தெம்பையெலாம்
மூக்குச் சலியாக்கி
முன்வழியச் செய்வதுயார்?
நாக்கில் சுவையார்
நகி! 04
அடுப்புக்கு மேலே
அமர்ந்ததைப் போலே
இடுப்புக்கு மேலே
எரியப் - படுத்தாலோ
பாய்கருகும் வாசனை
பக்கத்து வீடுவரை
போய்விடுவ தாகப்
புகார்! 05
வடிகால்போல் மூக்கு
வடியும், அதனை
வெடித்தவயற் பாசனமாய்
விட்டால் - விடிவதற்குள்
முப்போகம் காணலாம்;
முன்வருமா நம்விடியல்
அப்பாஆள் கின்ற
அரசு!? 06
எய்தாமல் அம்பை
இருந்த இடம்வைக்கச்
செய்த அனங்கனும்
சென்றுவிட்டான்; – நெய்யூற்றி
மென்மேலும் தீவளர்க்க
வேண்டாம் எனமனதில்
என்மேல் இரக்கம்
எழுந்து! 07
ஈரத் துணியை
எனதுநெற்றி இட்டாலோ
நேரத்தில் காயும்
நிலைகண்டேன்; – பாரத்தை
மாத்திரைமேல் போட
மனமில்லை; ஊசியெனில்
காத்திழந்த பந்தாவேன்
கண்டு! 08
கஞ்சியும் கூடக்
கசக்கிறது; வாய்க்கசப்பு
கொஞ்சமா அச்சம்
கொடுக்கிறது? – நெஞ்சையே
நோகடிக்கும் காய்ச்சலெனும்
நோயை விடஇரைந்தே
சாகடிக்கும் லப்டப்
சவுண்டு! 09
சோக்கரின் மூக்கில்
சொலிக்கின்ற செவ்வுருண்டை
பார்க்க நகைப்பைப்
பரப்புதல்போல் – வீக்கத்தில்
பூச்சியம் போலே
புடைத்ததே வெஞ்சூட்டு
மூச்சில் சிவந்தஎன்
மூக்கு! 10
பத்தியச் சாப்பாடும்
பாயிலே கூப்பாடும்
எத்தனைநாள் இன்னும்
எனவறியேன்; – நித்திரை
வந்தபா டில்லை;
வருங்கனவும் நிம்மதி
தந்தபா டில்லை
தணற்கு! 11
காய்ச்சலென்று டாக்டரிடம்
காட்டினால் கண்டகண்ட
ஆய்வுக்கு நம்மை
அனுப்புவான் – வாய்ப்பமைந்தால்
பையைத் துடைத்துப்
பரதேசி ஆக்கிடுவான்
கையைப் பிடித்தாலே
காசு! 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக