வியாழன், 18 ஜூன், 2026

131. புலவி!

 

131. புலவி!

 

புல்லா திராஅப் புலத்தை அவருறும்

அல்ல‍ல்நோய் காண்கம் சிறிது! 1301

 

மென்பஞ்சே போலிருக்கும் என்நெஞ்சே! ஊடலினால்

அன்பர் வருத்தம் அடையட்டும் – முன்புபோய்க்

கட்டி அணைக்க‍க் கருத்தி நெருங்காமல்

எட்டித்தான் கொஞ்சம் இரு!

 

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்! 1302

 

தேவையறித் துப்பைத் தெளித்தால் உணவுநம்

நாவைக் கடக்கும் நலமாக; – தேவைக்கு

மேலிட்டால் கெட்டு விடுமுணவைப் போலூடல்

மேலதிகம் ஆக விடேல்!

 

அலந்தாரை அல்ல‍ல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல்! 1303

 

மென்மேற் சுமையேறி வேதனை தான்கூடிப்

புன்மை அடைந்து பொசுங்கிடுவார்; – தன்னினிய

பொய்க்கோபம் காட்டப் புகுவார்க்(கு) அதைத்தீர்த்து

வைக்காமல் விட்டு விடின்!

 

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று! 1304

 

மென்சண்டை போடுகிற மெல்லியலார் கோபத்தை

முன்நின்று தீர்க்க முயலாமை, – வன்காய்வில்

வாடிக் கிடக்கின்ற வள்ளிக் கொடிவேரைத்

தேடி அரிவதெனத் தேர்!

 

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

பூவன்ன கண்ணார் அகத்து! 1305

 

பூங்கணைபோற் கண்ணுடைய பூவையரின் நெஞ்சத்து

நீங்காத ஊடல் நிலைசிறப்பே; – பாங்கான

பீடது பெற்றுநற் பேரது சேர்ந்தநல்

ஆடவர்க்(கு) அஃதே அழகு!

 

துனியும் புலவியும் இல்லாயின் காம‍ம்

கனியும் கருங்காயும் அற்று! 1306

 

செல்ல வருத்தமும் சின்ன பிணக்கமும்

இல்லாத காதல் இளைத்திளைத்துப் – பல்பதிக்கத்

தோதற்ற வெம்பழம்போல் தொத்தற் கருங்காய்போல்

ஏதற்கும் ஆகா(து) இறும்!

 

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவது அன்றுகொல் என்று! 1307

 

ஆசைக் கலவியின் ஆயுள்நீ ளாதோவென்(று)

ஓசை உளத்தே ஒலிப்பதனால் – பூசையின்

முன்நிகழு கின்ற முறைப்பில் முகங்காட்டும்

துன்பம் சிறிது துளிர்த்து!

 

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்

காதலர் இல்லா வழி! 1308

 

துன்பம் அடைந்து துடித்துத் துடிதுடித்துப்

பின்பும் வருத்தம் பெருக்குவதேன்? - இன்னதுதான்

தாக்குகிற தென்றறிந்து தானே முனம்நின்று

போக்குகிற அன்பரிலாப் போது!

 

நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது! 1309

 

உண்ணும் படிச்சுவை உண்டாகும், அந்நீரும்

தண்ணென்ற நீழற்கீழ்த் தானிருந்தால்; – கொண்டபெரும்

ஊடலும் அன்புடையா ரோடு நிகழுமெனில்

நீடலுண்டு இன்பம் நிறைந்து!

 

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்

கூடுவம் என்பது அவா! 1310

 

சண்டை தணிக்கச் சமரசம் செய்யவழி

கண்டார் இலையந்தக் காதலரைத் – தண்டாமல்

ஒசை எழுப்பி உறவாட உந்திடுதே

ஆசையி னாலே அகம்!

 

 

ஆளெல்லாம் கூடி அமர்ந்து மகிழ்ந்திருந்து

மீளாத யாவினையும் மீட்டெடுக்க - நாளெல்லாம்

தேனலைபோல் வந்து செவிகள் நிறைத்திடும்

வானலை தந்தவர்க்கென் வாழ்த்து!

 

தூக்களைப் பற்றி நீங்கள்

தூக்கிய தூக்கு கொஞ்சம்

தூக்கலே; வரிசை கட்டித்

தூக்களும் தூக்கச் சொல்லி

தூக்கவே மகிழ்ச்சி பொங்கித்

தூக்கமே அற்றுப் போன

தூக்களை நானும் கொஞ்சம்

தூக்கித்தான் பார்த்திட்டேனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக