வியாழன், 18 ஜூன், 2026

115 அலர் அறிவுறுத்தல்

 

115 அலர் அறிவுறுத்தல்

 

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்! 1141

 

புறம்பேசு வார்பேச்சே போகும் உயிரைத்

திறம்பட‍ மீட்டுவந்து சேர்க்கும்; – மறந்துமிதை

இன்றளவும் ஊர்காண ஏலா திருப்பதென்

முன்வினைக் காரண மோ!?

 

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலரெமக்கு ஈந்ததிவ் வூர்! 1142

 

கூறுபழிச் சொல்லால் குறையவிடா தெம்காதல்

ஏறுமுகம் காணவைத்தார் இவ்வூரார்; – நாறுகிற

அல்லிமலர் போலும் அகன்ற விழியுடைய

மல்லிகையாள் மேன்மை மறந்து!

 

உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து! 1143

 

ஊர்முழுதும் எம்பேச்சே ஓங்கி ஒலிப்பதும்,

பார்முழுதும் எம்முறவைப் பாடுவதும், – வேர்பிடித்த

வெண்காதல் மன்னவனின் மேனி தழுவிய

புண்ணியம்யான் பெற்றதனைப் போன்று!

 

கவ்வையால் கவ்விது காம‍ம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து! 1144

 

காணும் பழிச்சொல்லே காதலக ராதியில்

பேணும் கலைச்சொல்லாய்ப் பேறுபெறும்; – வேணுமட்டும்

இப்பெரும் ஊர்ப்பழிச்சொல் இல்லாது போய்விடின்

சப்பென்று போகும் சலித்து!

 

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காம‍ம்

வெளிப்படும் தோறும் இனிது! 1145

 

உண்ணுங்கால் கள்ளையின்னும் உண்ண அடிமனத்தே

எண்ணம் இனிதுற்(று) எழுதல்போல், – உண்மையலர்

தோன்றும் பொழுதெல்லாம் துய்க்கும் பெருங்காதல்

ஈன்றுதரும் இன்பம் இனிது!

 

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று! 1146

 

காதலரைப் பொன்மலர்க் கண்களால் கண்டதெல்லாம்

மாத‍த்தில் ஓர்நாள் மணித்துளியே; – பாதகச்சொல்

அம்புலியைத் தின்னும் அரவுபோல் தோன்றிற்றே

இம்பருல கெங்கும் இனிது!

 

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளுமிந் நோய்! 1147

 

ஊரார் குறைகூறல் உற்ற உரமாக,
நீராகி அன்னைசொல் வேர்பாய, - பாராய்!
நெடிதோங்கி நின்று நிழல்விட் டரும்பிக்

கடிதோங்கிக் காய்க்கும்இந் நோய்!

 

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

காம‍ம் நுதுப்பேம் எனல்! 1148

 

நெய்யெடுத்(து) ஊற்றி நெருப்பை அணைக்கின்ற

பொய்யளக்கும் செய்கையினைப் போன்றதே – வையத்தார்

சொல்லெலாம் சூழ்வதந்திச் சொற்களால் காதலைக்

கொல்ல‍லாம் என்கின்ற கூற்று!

 

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை! 1149

 

ஊர்வதந்திக் கெல்லாம் உளம்நொந்தால் ஆகுமா?

தீர்,வருத்தம்’, என்றன்பு செய்தவன் – பார்கண்டு

வெட்கும் படியாய் விடைபெற்றுச் சென்றதற்காய்

உட்கும் படிநாம் உயிர்த்து!

 

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கௌவை எடுக்கும்இவ் வூர்! 1150

 

தானும் விரும்பித் தனதினிய காதலன்பை

வானும் வியக்க வழங்குவார்; – நானுமே

வாங்க விரும்பும் வத‍ந்திகளை இவ்வூரார்

ஓங்கி ஒலித்த உடன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக