113 காதல் சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்! 1121
பக்குவப் பேச்சுடையாள் பன்னீர் இதழெச்சில்
எக்குணத்த தென்றே எனைக்கேட்டால், – தக்கபசும்
பாலைப் பதங்காய்ச்சிப் பைந்தேனை
ஊற்றியுண்ணும்
காலைத்தே நீரென்பேன் கண்டு!
உடம்பொடு உயிரிடை என்னமற் றென்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு! 1122
இளமான் தனக்கும் இளையோன் எனக்கும்
உளநட்பின் ஆழம் உரைக்கின், – வளமான
ஆக்கைக்கும் ஆருயிர்க்கும் ஆன தொடர்பேபோல்
நீக்கமறக் காணும் நிலைத்து!
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்! 1123
கண்ணில் இருக்கின்ற கண்மணியை விட்டுஇளம்
பெண்ணை அமர்த்திப் பெயர்ந்துபோ! – கண்ணிலே
பூவை அமரஇடம் போதா தெனும்போதேன்
பாவையுனக் கிம்மாம் பரப்பு!?
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து! 1124
இன்னுயிர்க்கே இன்னுயிரை ஈகின்றாள்
நானவளின்
பொன்னுறவில் ஈடுபடும் போழ்தினிலே; – என்னுயிரை
இல்லாமல் ஆக்குகிறாள் எப்போதே னும்நிகழும்
பொல்லாப் பிரிதலின் போது!
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்! 1125
எண்ணமறந் தாலன்றோ என்னைக் கவர்ந்தவளை
எண்ணிஎண்ணி நெஞ்சம் இளைத்திருப்பேன்; – கண்ணால்
மறத்தொழில் செய்கின்ற மாதை நொடியும்
மறக்க வறியேன் மனத்து!
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியரெங் காத லவர்! 1126
கண்விட்டு நீங்காத காதலர் நான்மறந்து
கண்ணிமைத்த போதினிலும் கண்டுமனம் –
புண்படார்;
பெண்தன்மை மெச்சுகிற பேராண்மை
பெற்றிருந்தும்
நுண்தன்மை வாய்ந்ததவர் நோக்கு!
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து! 1127
சேல்தீட்டி மைவடியச் செய்திடேன் காதலர்
வேல்வீச்சுக் கண்ணிலே வீற்றுளதால் –
மால்கொண்டு
தீட்டும்மை என்னவரின் தேகந் தனைமறைத்து
வாட்டுமெனை என்றே மருண்டு!
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து! 1128
கூடுவைகும் காதலரைக் கொஞ்சிக் களிக்காமல்
சூடுவைக்கும் நோக்கம் துளிர்விடுமோ? – சூடுமிகும்
எவ்வுணவும் தீண்டேன்; இதயம்
குளிர்விக்கும்
அவ்வுணவே உண்பேன் அறிந்து!
இமைப்பின் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் ஊர்! 1129
கண்ணிமைக்கும் அந்தக் கணநேரம் காதலர்
கண்ணுள்ளே காணாத காட்சியினால் –
பெண்ணிவளைத்
தூக்கி எறிந்துவிட்டான் தூயஅன்பில்
லானென்னும்
நாக்கில் நரம்பின்றி நாடு!
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும்
இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் ஊர்! 1130
உள்ளத்தின் உள்ளேதான் உள்ளார், கவர்ந்தென்னை
உள்ளத்தில் வைத்த உயிர்நேசர்; – உள்ளத்தின்
உள்ளுள்ள போதும் உணராஊர் முன்வைக்கும்
தள்ளியுள்ள தாய்க்குற்றச் சாட்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக