வியாழன், 18 ஜூன், 2026

114 நாணுத் துறவுரைத்தல்

 

114 நாணுத் துறவுரைத்தல்

 

காம‍ம் உழந்து வருந்தினார்க்கு ஏம‍ம்

மடல‍ல்லது இல்லை வலி! 1131

 

உள்ளத்துக் காதலால் உண்டாகும் துன்பத்தைத்

தள்ளித் தனிவைத்துத் தற்காத்துக் - கொள்ளப்

பனைமடல் ஏறல் பயனே;வே றுண்டோ

துனைந்தெனைக் காக்கும் துணை?

 

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து! 1132

 

அல்ல‍ல்ஆற் றொண்ணாத ஆக்கையும் ஆருயிரும்

வல்லதெனத் தேர்ந்து மடலேறும் – நல்லதென

நாணதனை ஏற்று நலம்பாடல் இப்பொழுது

வீணதென நெஞ்சம் விடுத்து!

 

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்! 1133

 

வாட்டுகின்ற காதலால் வாலிபர் ஏறுகின்ற

காட்டுப் பனைமடலைக் கைக்கொண்டேன்; – கூட்டினிலே

அந்நாளில் நானேற்ற ஆண்மையும் நாணமும்

இந்நாளில் தூக்கி எறிந்து!

 

காமக் கடும்புனல் உய்க்குமே நாணோடு

நல்லாண்மை என்னும் புணை! 1134

 

ஆணென்னும் அந்த அகந்தை மரக்கலத்தை,

நாணென்னும் அப்பெரும் நாவாயை, – வீணமிழ்த்தும்

காதல் எனுமிந்தக் காட்டுப் புனல்மேவிச்

சேதம் பலவாறு செய்து!

 

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொரு

மாலை உழக்கும் துயர்! 1135

 

கொத்து வளையணிந்த கோலக் குலமகளே

மொத்தமாய்த் தந்தென்னை மூழ்கடித்தாள்; – பித்தேற்றும்

மாலை மயக்கொடு வற்றல் பனைமர

ஓலை மடலேற்றம் ஓர்ந்து!

 

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படல்ஒல்லா பேதைக்கென் கண்! 1136

 

நட்ட நடுநிசியும் நானேற எண்ணுவேன்

தொட்டு மடலேற்றம் தோதென்று; – வட்டமுகப்

பேதை பொருட்டுப் பெரிதுமுறங் காமற்கண்

காதைத் திருகுவதைக் கண்டு!

 

கடலன்ன காம‍ம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்! 1137

 

ஓதக் கடலளவு உள்ளத்தே உண்டாகும்

காதலுக்காய் வன்மடலைக் கைக்கொள்ளாச் – சீதவிழி

மங்கைப் பிறப்பினும் மாட்சி பொருந்தியது

இங்கிருக்கக் கண்டால் இயம்பு!

 

நிறையரியர் மன்அளியர் என்னாது காம‍ம்

மறையிறந்து மன்று படும்! 1138

 

வற்றாத அன்பினையும் மாறா மனதினையும்

சற்றும் நினைந்து தணியாமல் – முற்றிப்

பிதுங்கிடுங் காதல் பிறர்காணு மாறு

பொதுவெளியில் போட்டுடைக்கும் போய்!

 

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காம‍ம்

மறுகின் மறுகும் மருண்டு! 1139

 

இன்றளவும் தன்னை எவரும் அறிந்தில்லை

என்றளவில் நெஞ்சம் இடிந்திளைத்த - என்காதல்

தேம்பி அழிமே, தெருமுக்கில் நின்றபடிக்

கூம்பி இராமல் குதித்து!

 

யாம்கண்ணில் காண நகுப அறிவிலார்

யாம்பட்ட தாம்படா வாறு! 1140

 

முகத்தின் எதிர்நின்று முத்துப்பல் காட்டி
அகத்திற்புண் செய்வார் அறிவோ(டு) – அகமுமிலார்;
யானுற் றுயிருருகி வாடும் நெடுங்காமம்
தானுறாத் தன்மையால் சார்ந்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக