வியாழன், 18 ஜூன், 2026

112 நலம்புனைந்துரைத்தல்!

 

112 நலம்புனைந்துரைத்தல்!

 

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்! 1111

 

மென்மை மலர்க்கெல்லாம் மேலாம் அனிச்சமே!

மன்றில் உனைவைத்து வாழ்த்துகிறேன்; - என்றாலும்

வன்மை மிகுமென் மனதைக் கவர்ந்தாளின்

மென்மைஉன் மென்மையினும் மேல்!

 

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று! 1112

 

பூத்துக் குலுங்குகிற பூக்காணும் போதுதன்னை

ஈத்து மயங்குகிறாய் என்நெஞ்சே! – மாத்துப்பொன்

மங்கைவிழி போன்றுளது மாநிலத்தார் காணுமா(று)

இங்கலர்ந்த பூங்களெல்லாம் என்று!

 

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு! 1113

 

பச்சைத் தளிர்உடல்; பல்வரிசை முத்துக்கள்;

மெச்சும் நறுமண மேடுகள்; - அச்சமிலா

மைவிழி கூர்மிகுவேல்; மாவன மூங்கில்தோள்;

பெய்வளைக்கு வாய்த்தனவிப் பேறு!

 

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று! 1114

 

காட்டுக் குவளைக்குக் கண்ணிரண்டு வாய்த்ததென்றால்

நோட்டமிட்டு மண்பார்த்து நொந்துவிழும்; – வீட்டுப்பெண்

மானினிரு கண்கள் வடிவுக் கிணையாக

ஏனில்லை தன்னழகு என்று!

 

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை! 1115

 

தண்டு களைந்துவிட்டுத் தான‍ணிதல் நன்றெனினும்

கண்டுகொள் லாமல் கவர்ந்தனிச்சஞ் – செண்டை

நனிநெருங்கச் சூடி நகைத்தாள்; இடைக்கே

இனிய‍இசை உண்டோ இனி!

 

மதியும் மடந்தை முகனும் அறியாப்

பதியிற் கலங்கிய மீன்! 1116

 

மண்ணில் உலாவும் மடந்தைத் திருமுகமும்

விண்ணில் நிலாவின் வியனுருவும் – விண்மீனுக்(கு)

ஒன்றென்றே தோன்ற, உருமாற்றம் காணாமல்

நின்று கலங்கியதே நெஞ்சு!

 

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து! 1117

 

தேய்ந்தும், மெலிந்த‍ஒளி தேறுவது மாய்வானில்

தீய்ந்து கிடக்கின்ற திங்களிடம் – ஏய்ந்து

கலக்கம் விளைக்கும் களங்கம்போல் மங்கை

மலர்முகத்தில் உண்டோ மறு!?

 

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி! 1118

 

வாழ்க நிலா!வென்று வாயாற வாழ்த்துவேன்,

ஆழ்மனக் காதல் அகழ்ந்துரைப்பேன், – சூழ்ந்தென்றும்

பொன்னொளி சிந்துகின்ற பூவை முகம்போல

இன்னொளி சிந்தி இரின்!

 

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி! 1119

 

பொன்மலர் போலிருக்கும் பூங்கண்கள் கொண்டவளின்

மென்முகம் போலிருக்க வேண்டுமெனில் - இன்றுமுதல்

முந்தி முகம்காட்ட முற்றந் தொறும்நிலவே!

வந்தொளிராய் ஊர்காணு மாறு!

 

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்! 1120

 

பொய்கைவாய் பூத்துப் பொலியும் அனிச்சமும்

துய்ய நிறவன்னத் தூவியும் – செய்ய

உருமுலை மாதர் உயர்பொன் அடிக்கு

நெருஞ்சிப் பழத்துக்கு நேர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக