130. நெஞ்சொடு புலத்தல்!
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும்
எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது? 1291
என்னைக் கருதாமல் என்பின் திரியாமல்
தன்னைக் கருதுமவர் தன்நெஞ்சம்; – என்நெஞ்சே
நீமட்டும் என்துணையால் நில்லாமல்
நீங்குகிறாய்
காமத்தி னாலே கழன்று!
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு! 1292
அன்பில்லார் என்றே அறிந்தபின்னும் போய்அவரின்
முன்னின்றாய் நெஞ்சே! முறைதானா? – என்றென்றும்
உண்மையில் நம்மை உளத்தால் வெறுத்தொதுக்க
எண்ணிடவும் மாட்டாரே என்று!
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்! 1293
நண்பரென்ப தில்லை நலிந்துகெட்டார்க்
கென்கின்ற
உண்மை அறிந்தா உடன்சென்றாய்? – அண்மை
எனக்கிருக்க மாட்டா தெடுத்தெறிந்து விட்டு
மனமுவந்தென் னைதனிமை வைத்து!
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே!
துனிசெய்து துவ்வார்காண் மற்று! 1294
என்னைத் தனிவிடுத்து எங்கோ புறப்பட்ட
உன்னிற் பிணக்கின்பம் உண்டாகா - துன்னுடனே
ஒன்றி இருந்தின்ப ஊடற் சுவைகாண
இன்றளவில் யாரும் இலர்!
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு! 1295
பக்கமிலாப் போதும் படபடக்கும்; காதலவர்
பக்கமிரார் என்றும் பரிதவிக்கும்; – எக்கணமும்
நீங்காத துன்பத்தை நீட்டி எனக்களித்துத்
தூங்காது நெஞ்சம்அந் தோ!
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு! 1296
நான்தனியே தானிருந்து நாயகரின்
பொய்ப்பிரிவைத்
தான்நினைந்து வாடுகையில் தண்டனையாய் – ஊன்வேண்டி
ஊள்ளமே என்னை உணவாக உட்கொண்ட
பள்ளமே நானென் பது!
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு! 1297
என்ன வரைமறக்க ஏலா மடநெஞ்சு
தன்னொடு சேர்ந்து தறிகெட்டுப் –
பின்பும்நான்
ஏன்மறக்க லாகா தெனுமறிவும் இல்லாமல்
நான்மறந்தேன் நான்மறந்தேன் நாண்!
எள்ளின் இழிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு! 1298
வார்த்தைகள் வீசி வசைபாடி என்னவர்மேல்
போர்த்துவ தாலே புகழிலையென்று -
ஆர்த்தெழும்
ஆருயிர்க் காதல் அமைவால் அவர்பெருமை
நேருறப் பேசும்என் நெஞ்சு!
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி! 1299
வந்த துயரை வடித்துப் புறந்தள்ள
எந்த மனிதர் எனக்கருள்வார்? – சொந்தமனம்
பக்கத்தில் நின்று பரிதவிப்பை ஆற்றாமல்
பொக்கென்று தான்விலகும் போது!
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி! 1300
மாற்றாரும் எந்த மதத்தாரும் என்னளவில்
வேற்றாராய்ப் போதல் வியப்பில்லை; - ஏற்றஎன்
புந்தியே என்னைப் புரிந்துறவாய்ப் பேணாமல்
குந்தியே தானிருக்கும் போது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக